தேசிய நெடுஞ்சாலையில் `நெஞ்சுக்கு நீதி' கட் அவுட்கள்... பதறும் வாகன ஓட்டிகள்: கண்டுகொள்ளுமா மாநகராட்சி?

தேசிய நெடுஞ்சாலையில் `நெஞ்சுக்கு நீதி' கட் அவுட்கள்... பதறும் வாகன ஓட்டிகள்: கண்டுகொள்ளுமா மாநகராட்சி?

சாலையோரங்களில் கட் அவுட் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதற்கு ஆளும்கட்சியினர் துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியான நிலையில் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் மரங்களின் மீது சாய்ந்து கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியானது. இதை உதயநிதியின் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். படத்தினை வரவேற்று தேசிய நெடுஞ்சாலைகளிலும் பிரம்மாண்டமான கட் அவுட்களை வைத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு, வில்லுக்குறி பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த பிரம்மாண்ட கட் அவுட்கள் அணிவகுக்கிறது. சாலையோர மரங்களின் மீது இந்த கட் அவுட்கள் சாய்த்து கட்டிவைக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் கடுமையான காற்றும், மழையும் பெய்துவருகிறது. இப்படியான சூழலில், மீண்டும் புற்றீசல் போல் முளைத்துள்ள கட் அவுட்கள் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் கட் அவுட் கலாச்சாரத்தினால் பல உயிர் பலிகள் நிகழ்ந்து வந்தது. இதேபோல் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் இதற்கு எதிராக பலகட்டப் போராட்டங்களை நடத்தினார். கடைசியில் உயர்நீதிமன்றம், சாலையோரங்களில் கட் அவுட் வைக்கக்கூடாது என கிடுக்குப்பிடி போட்டது. அப்போது விதியை மீறியவர்கள் மீது கைது நடவடிக்கையும் பாய்ந்தது. இதனாலேயே, சாலையோர கட் அவுட் கலாச்சாரம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்காக இன்று மீண்டும் சாலையோர கட் அவுட் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. ரசிகர்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த பதாகைகளில் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆகியோரின் படங்களுடன், உள்ளூர் அமைச்சர் மனோ தங்கராஜ் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதனால் போலீஸாரும் கட் அவுட்டை அகற்றுவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

படத்தின் பெயர் தான் நெஞ்சுக்கு நீதி. இப்போதைய சூழலில் ரசிகர்களுக்கும் வேண்டும் நெஞ்சுக்கு நீதி! இனியும் வேண்டாமே இந்த அநீதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in