`விக்ரம்’ சூப்பர் ஹிட்: ஆண்டவருக்கு கோயில் கட்ட தயாராகும் ரசிகர்கள்!

`விக்ரம்’ சூப்பர் ஹிட்: ஆண்டவருக்கு கோயில் கட்ட தயாராகும் ரசிகர்கள்!

’விக்ரம்’ படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு அவர் ரசிகர்கள் கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர்.

கமல்ஹாசன் நடித்து கடந்த 3-ம் தேதி வெளியான படம், ’விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அனிருத் இசை அமைத்துள்ளார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்தப் படம் பான் இந்தியா முறையில் இந்தியா முழுவதும் வெளியானது. நான்கு வருடங்களுக்குப் பிறகு கமல் நடித்துள்ள படம் என்பதால், இதற்கு எதிர்பார்ப்பு அதிகமிருந்தது. படம் ரிலீஸான முதல் நாளிலிருந்தே இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. தமிழைப் போலவே வட இந்தியாவிலும் வரவேற்புக் கிடைத்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலும் இந்தப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கமல்ஹாசனுக்கு கோயில் கட்ட முடிவு செய்திருந்த அங்குள்ள ரசிகர்கள், ’விக்ரம்’ வெற்றியால் அதைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கொல்கத்தா அருகில் உள்ள கிதிர்பூர் பகுதியை சேர்ந்த ரசிகர்கள், கமல்ஹாசனுக்கு கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர். எப்போது கோயில் கட்ட இருக்கின்றனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

ஏற்கெனவே, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கும் கொல்கத்தா ரசிகர்கள் கோயில் கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in