
‘பதான்’ பட வெற்றிக்குப் பிறகு அட்லீயின் ‘ஜவான்’ படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார் நடிகர் ஷாருக்கான்.
நான்கு வருடங்களுக்குப் பிறகு நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. விமர்சனரீதியாக படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல்ரீதியாக படம் வெற்றிப் பெற்றது.
இதனையடுத்து நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார். சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. தற்போது மும்பை ஏர்போர்ட்டில் இயக்குநர் அட்லீயுடன் ஷாருக்கான் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த வருடம் ஜூன் மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க விஜய்சேதுபதி எதிர்மறை கதாபாத்திரத்திலும், நடிகர் விஜய் சிறப்புத்தோற்றத்திலும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.