அடுத்து ’தி டெல்லி ஃபைல்ஸ்’: இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி சூசகம்!

அடுத்து ’தி டெல்லி ஃபைல்ஸ்’:  இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி சூசகம்!

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி, அடுத்து ’தி டெல்லி ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

காஷ்மீரில் 1990-ம் ஆண்டுகளில் இந்து பண்டிட்டுகளை குறி வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டப்பட்டனர். இதனால், லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறினர்.

அப்போது. காஷ்மீரில் பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், அவர்கள் உயிர்பயத்துடன் வெளியேறிய சம்பவங்களைக் கொண்டு, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படம் இந்தியில் உருவானது. விவேக் அக்னிகோத்ரி இயக்கிய இந்தப் படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், பல்லவி ஜோஷி உட்பட பலர் நடித்துள்ளனர். மார்ச் 11 -ம் தேதி வெளியான இந்தப் படம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தாண்டி வசூலிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில், தனது அடுத்தப் படத்தை இயக்க இருப்பதாக விவேக் அக்னிகோத்ரி தெரிவித்துள்ளார். ’தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்த்த அனைவருக்கும் நன்றி. கடந்த நான்கு வருடங்களாக கடுமையாக உழைத்து நேர்மையாக அந்தப் படத்தை உருவாக்கினோம். காஷ்மீர் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம். எனது அடுத்தப் படத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில், ’தி டெல்லி ஃபைல்ஸ்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதனால், அவர் டெல்லி பற்றிய கதையை படமாக இயக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.