
‘சூர்யா 42’ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42-வது படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா படமாக 3டி-யில் கிட்டத்தட்ட 10 மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கிறது. கதாநாயகியாக திஷா பட்டானி நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடந்து வருகிறது.
இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என சொல்லப்படுகிறது. ’சூரரைப் போற்று’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சுதாகொங்கரா- சூர்யா கூட்டணி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படக்கூடிய ஒன்று. நிச்சயம் இரண்டாவது முறை படத்திற்காக இணைவோம் என்பதை இவர்களும் உறுதிப்படுத்த ‘சூர்யா 42’ படத்திற்குப் பிறகு இது நடக்கும் என சொல்லப்படுகிறது.
‘வாடிவாசல்’ தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்படுவதால் அதற்குள் சுதாவுடன் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் சூர்யா. குறுகிய காலத்திற்குத் திட்டமிட்டுள்ள இந்தப் படம் இந்த வருடம் டிசம்பர் இறுதிக்குள் முடியும் என சொல்லப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வரும் என எதிர்பார்க்கலாம்.