காமராஜருக்குப் பிறகு நல்ல முதல்வரைப் பார்க்க முடிவதில்லை - எஸ்.ஏ.சந்திரசேகர்

காமராஜருக்குப் பிறகு நல்ல முதல்வரைப் பார்க்க முடிவதில்லை - எஸ்.ஏ.சந்திரசேகர்

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடந்தது. இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிம்பு மட்டும் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் படப்பிடிப்பு இருப்பதால் வரமுடியவில்லை என்று கூறப்பட்டது.

இவ்விழாவில், ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்த நடிகரும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “கர்ணம் தப்பினால் மரணம் என்பது போல் உள்ள கதைதான் ‘மாநாடு’. இதன் மூலம் புதுவகையான ஜானரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார் வெங்கட் பிரபு.

இப்படத்தில் வரும் மத அரசியல் காட்சி இந்தியாவையும், வாரிசு அரசியல் காட்சி தமிழ்நாட்டையும் இணைத்துள்ளன. 3 படங்களில் முதலமைச்சராக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரம் நல்லவராக இருப்பதை பலரால் ஏற்க முடியவில்லை. ஏனென்றால், காமராசருக்குப் பிறகு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை” என்று கூறினார்.

மேலும் அவர் பேசும்போது, “படத்தின் கதாநாயகன் சிம்பு இந்த நிகழ்ச்சிக்கு வராதது ஏன் என தெரியவில்லை. இன்று படப்பிடிப்பு இருந்தாலும் இங்கு அவர் வந்திருக்க வேண்டும், அவர் வராதது எனது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. தயாரிப்பாளருக்காக அவர் வந்திருக்க வேண்டும். நடிகர்கள் வெற்றி வந்தவுடன் மாறிவிடக் கூடாது, படப்பிடிப்பில் நடந்து கொண்டதைப் போலவே, படம் வெளிவந்த பிறகும் இருந்தால்தான் நடிகர்களுக்கு வெற்றி தொடரும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in