‘கோப்ரா’வுக்குப் பிறகு மீண்டும் இணையும் விக்ரம்- அஜய் ஞானமுத்து கூட்டணி!

‘கோப்ரா’வுக்குப் பிறகு  மீண்டும் இணையும் விக்ரம்- அஜய் ஞானமுத்து கூட்டணி!

‘கோப்ரா’ படத்துக்கு பிறகு நடிகர் விக்ரம், இயக்குநர் அஜய் ஞானமுத்து மீண்டும் இணைய உள்ளனர்.

நடிகர் விக்ரம், இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் இணைந்துள்ள திரைப்படம் ‘கோப்ரா’. படத்தின் வெளியீட்டு தேதி முன்பு அறிவிக்கப்பட்டு பின்பு இந்த மாத இறுதிக்கு தள்ளி போயுள்ளது. படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து உள்ளனர். இதனை அடுத்து நேற்று இரவு ‘கோப்ரா’ படக்குழுவினருடன் நடிகர் விக்ரமும் ட்விட்டர் ஸ்பேசில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். மேலும் படம் குறித்தான பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது, " கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு என் படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது என்பதே எனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம் தான். நானும் துருவ்வும் முதல் முறையாக இணைந்து நடித்த ‘மஹான்’ திரைப்படம் தியேட்டரில் வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால், அது நடக்காமல் போனதில் வருத்தம் தான். ஆனால், அதற்கெல்லாம் சேர்த்து தற்போது ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ என அடுத்தடுத்து என் படங்கள் வெளியாக இருப்பதில் மகிழ்ச்சி. ‘கோப்ரா’ கதை வித்தியாசமானது. இதில் எத்தனை கெட்டப் எனக்கு என நிறைய பேர் கேட்கிறார்கள். நிஜமாக எனக்கு நினைவில்லை. அதே போல, படத்தில் கெட்டப் போட வேண்டுமே என்று இத்தனை திணிக்கவில்லை. கதைக்குத் தேவைப்பட்டது.

‘கோப்ரா’ படத்திற்காக ரஷ்யாவில் படப்பிடிப்பு செய்தோம். கிட்டத்தட்ட -27’C குளிர் இருந்தது. படப்பிடிப்பு செய்ய கடினமான சூழலில் அதை எல்லாம் பார்க்காமல் நடித்துள்ளோம். படத்தின் டிரெய்லர் படம் வெளியாவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு நிச்சயம் வெளியாகும்” என பேசியுள்ளார். இது மட்டுமல்லாது தன்னுடைய 62-வது படமாக மீண்டும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் இணைவதையும் நடிகர் விக்ரம் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ படம் தவிர்த்து விக்ரம் தற்போது இயக்குநர் இரஞ்சித்துடன் ஒரு படம் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in