
‘உன்னை நினைத்து’ திரைப்படத்தில் விஜய் உடன் லைலா நடிக்கும் ஏற்பாடு தடைபட்ட பிறகு, சுமார் 21 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒரே படத்தில் இணைந்துள்ளதை ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.
’பூவே உனக்காக’ திரைப்படத்தின் வாயிலாக விஜய்க்கான ரசிகப் பரப்பை அகலத் திறந்து வைத்தார் இயக்குநர் விக்ரமன். அதுவரை ஆக்ஷன், ஆட்டம் பாட்டம் என கலந்துகட்டி நடித்து வந்த விஜய்க்கு, அதன் பின்னரே தாய்குலத்தின் ஆதரவு உறுதியானது. இந்த பூவே உனக்காக திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விக்ரமன் - விஜய் கூட்டணியில் ’உன்னை நினைத்து’ என்ற தலைப்பில் இன்னொரு திரைப்படம் திட்டமிடப்பட்டது.
ஆனால் கதையின் போக்கு தொடர்பாக விஜய் - விக்ரமன் இடையே முட்டிக்கொள்ள, உன்னை நினைத்து திரைப்படத்திலிருந்து விஜய் விலகினார். பிற்பாடு சூர்யா அந்த திரைப்படத்தில் நடித்தார். ’உன்னை நினைத்து’ திரைப்படத்தின் நாயகியான லைலா, சில மாதங்களுக்கு முன்னர் பழைய நினைவுகளை கிளறி இருந்தார்.
அஜித், சூர்யா, பிரசாந்த், விக்ரம் என அப்போதைய டாப் ஹீரோக்கள் பலருடனும் ஜோடி போட்ட லைலா, விஜய்யுடன் இணைந்த ’உன்னை நினைத்து’ ஏனோ நிலைக்கவில்லை. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, ’உன்னை நினைத்து’ திரைப்படத்தில் விஜய் உடனான ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு லைலா வாழ்த்து தெரிவித்திருந்தார். கூடவே, இழந்த வாய்ப்பை ஏக்கத்துடன் பதிவு செய்திருந்தார். அப்போது ’சர்தார்’ திரைப்படம் வாயிலாக லைலா தனது அடுத்த சுற்றை ஆரம்பித்திருந்தார்.
லைலாவின் ஏக்கம் போக்கும் வகையில் தற்போது ’தளபதி 68’ திரைப்படத்தில் அவருக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. 21 வருடங்கள் இடைவெளியில் நிகழ்ந்திருக்கும் சுவாரசியத்தை லைலாவுக்கு முன்னதாக ரசிகர்கள் நினைவுகூர்ந்து வாழ்த்தி வருகின்றனர். சிரிப்பழகியான லைலாவின் தொலைந்த புன்னகையில் ஒன்று, 21 ஆண்டுகள் கழிந்து கிடைத்திருப்பதாக ரசிகர் ஒருவர் பதிவிட்டிருப்பது ஓர் உதாரணம். அதிலும் அக்.24, நடிகை லைலாவின் பிறந்த தினம் என்பதால், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வோர், இந்த சுவாரசியத்தை நினைவுகூர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு