`அட்வான்ஸ் ரூ.40 லட்சம், மாத வாடகை ரூ.3 லட்சம்'- விஷால் பட வில்லன் மீது மோசடி புகார்

`அட்வான்ஸ் ரூ.40 லட்சம், மாத வாடகை ரூ.3 லட்சம்'- விஷால் பட வில்லன் மீது மோசடி புகார்
நடிகர் பாபுராஜ்

விஷால் பட வில்லன் நடிகர் மீது மோசடி புகார் கூறப்பட்டதை அடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகர் பாபுராஜ். இவர் தமிழில், ஜனா, ஸ்கெட்ச், விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’வீரமே வாகை சூடும்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவரான இவர் மீது தொழிலதிபர் ஒருவர் மோசடி புகார் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கொத்தமங்கலம், தாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அருண்குமார். இவர் நடிகர் பாபுராஜிடம் இருந்து மூணாறில் உள்ள ரிசார்ட் ஒன்றை குத்தகைக்கு வாங்கியுள்ளார். அட்வான்ஸ் தொகை ரூ.40 லட்சம் என்றும் மாதம் ரூ.3 லட்சம் வாடகை என்றும் 2020-ம் ஆண்டு ஜனவரியில் ஒப்பந்தம் போடப்பட்டது. அவர் ரிசார்ட்டை வாங்கிய சில மாதங்களிலேயே கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ரிசார்ட் மூடப்பட்டது.

இந்நிலையில் அதைத் திறக்க, அந்தப் பகுதி ஊராட்சி அனுமதிக்காக, கடந்த வருடம் விண்ணப்பித்தார் அருண்குமார். அப்போதுதான் வருவாய்த்துறை அதைக் கையகப்படுத்தி இருப்பது தெரியவந்தது. வருவாய்த்துறை 2018 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் நடிகர் பாபுராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் அதை மறைத்து, அருண்குமாருக்கு குத்தகைக்கு விட்டு மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கேட்டார், அருண்குமார். அதை அவர் கொடுக்கவில்லை.

இதனால் அடிமாலி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. அருண்குமார் நீதிமன்றம் சென்றார். நீதிமன்ற உத்தரவின் பேரில் இப்போது நடிகர் பாபுராஜ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.