பிரபல நடிகைக்கு ஆபாசக் குறுஞ்செய்தி: நடன இயக்குநர் மகன் கைது

சஞ்சனா கல்ராணி
சஞ்சனா கல்ராணி

நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக நடன இயக்குநர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான இவர், போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இவர், பெங்களூரு இந்திரா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், பிரபல பேஷன் நடன இயக்குநர் பிரசாத் பிடப்பாவின் மகன் ஆதம் பிடப்பா, தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறியிருந்தார்.

ஆதம் பிடப்பா
ஆதம் பிடப்பா

’அந்த குறுஞ்செய்தியால் நானும் என் குடும்பத்தினரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். ஒரு பிரபலத்தின் மகனால், இப்படி ஒரு மோசமான செய்தி அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25 ஆம் தேதி இரவு 11 மணிக்கு இந்த குறுஞ்செய்தியை அவர் அனுப்பினார்’ என்று கூறியிருந்தார் சஞ்சனா கல்ராணி.

இதையடுத்து கூர்க்கில் இருந்த ஆதம் பிடப்பாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர், தான் எந்த குறுஞ்செய்தியையும் அனுப்பவில்லை என்று மறுத்தார். நடிகையின் எண்ணை தனது வாட்ஸ் அப்பில் பிளாக் செய்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அவருடைய செல்போனை கைப்பற்றிய போலீஸார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in