`பெண்களைத் தவறாகப் பேசுவதா?’- யூடியூபரை நடுரோட்டில் அறைந்த `பிக்பாஸ்' நடிகை

`பெண்களைத் தவறாகப் பேசுவதா?’- யூடியூபரை நடுரோட்டில் அறைந்த `பிக்பாஸ்' நடிகை

பெண்களைத் தவறாகப் பேசுவதாகக் கூறி யூடியூபரை நடுரோட்டில் பிரபல நடிகை அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு குணசித்திர நடிகை கராத்தே கல்யாணி. சங்கர்தாதா எம்.பி.பி.எஸ், லீலா மஹால் சென்டர், சத்ரபதி, நேனு லோக்கல், குண்டூர் டாக்கீஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். கடந்த வருடம் பாஜகவில் இணைந்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஏதாவது கருத்துத் தெரிவித்து சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஹைதராபாத் அருகிலுள்ள யூசுப்குடா பகுதிக்கு இவர் வந்திருந்தார். கையில் குழந்தை ஒன்றையும் அவர் வைத்திருந்தார். அங்கு ஸ்ரீகாந்த் ரெட்டி என்ற யூடியூபரும் வந்திருந்தார். பிராங் வீடியோக்களால் அந்தப் பகுதியில் பிரபலமானவர் ரெட்டி. அவரைக் கண்டதும், ’பெண்களை ஏன் யூடியூப் சேனலில் தவறாக பேசுகிறாய்?’ என்று கேட்டார், கல்யாணி. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த கல்யாணி, திடீரென ரெட்டியின் கன்னத்தில் அறைந்தார். அவருடன் வந்திருந்தவரும் அடித்தார். இதை எதிர்பார்க்காத யூடியூபர் ஸ்ரீகாந்த் ரெட்டியும் கல்யாணியை அறைந்தார். இந்தச் சண்டையில் ரெட்டியின் சட்டை கிழிந்தது. நடுரோட்டில் இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டதைப் பார்த்த அந்தப் பகுதியினர், அதிர்ச்சி அடைந்தனர். இதை கல்யாணியும் அந்த யூடியூபரும் தங்கள் செல்போன்களில் வீடியோவும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் யூடியூபர் ஸ்ரீகாந்த் ரெட்டி, எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் கல்யாணி மீது புகார் அளித்தார். அதேபோல கராத்தே கல்யாணியும் தன்னைத் தாக்கியதாக ஸ்ரீகாந்த் ரெட்டி மீது போலீஸில் புகார் அளித்தார். இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நடுரோட்டில் நடிகையும் யூடியூபரும் தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.