
'பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் வினுஷா. ஐடி துறையில் வேலைப் பார்த்து வந்தவர், சமூக வலைதளங்கள் மூலம் கவனம் பெற்று ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வாய்ப்பைப் பெற்றார். தன் நிறத்திற்காகவும் உருவத்திற்காகவும் பல அவமானங்களைச் சந்தித்ததாகச் சொல்லி இருக்கிறார் வினுஷா.
‘பாரதி கண்ணம்மா2’ முடிந்த உடனேயே அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. வந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வாரங்களிலேயே டபுள் எவிக்ஷனில் வெளியே வந்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.
பிக் பாஸ் வீட்டு அனுபவம் எப்படி இருந்தது உங்களுக்கு?
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விரும்பியே உள்ளே சென்றேன். ஆனால், எனக்குக் கிடைத்த அனுபவம் என்பது வேறு. வெளிப்படையாக உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக, இந்த சீசனில் போட்டியாளர்கள் விளையாண்ட விதம் என்பது என்னை ரொம்பவே காயப்படுத்தியது. “நீ யூஸ்லெஸ்... நீ அவ்வளவுதான்” எனச் சொல்லி மட்டம் தட்டினார்கள். அதைக் கேள்விப்பட்டபோது எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதுவும் என் கண் முன்னால் நடக்கவில்லை. எனக்குப் பின்னால் பேசி இருக்கிறார்கள்.
நீங்கள் விரும்பிய பிக் பாஸ் நிகழ்ச்சியை வெறுப்பதற்கு இது மட்டும்தான் காரணமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்பெல்லாம் கேங்காகப் பிரிவது, சண்டையிட்டுக் கொள்வது, புத்திசாலித்தனமாக விளையாடுவது போன்ற விஷயங்களைத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒருவரை மட்டம் தட்டிப் பேசுவது, கேங்காக சேர்ந்து கொண்டு வேண்டுமென்றே வம்பிழுப்பது (Bully Action) இதெல்லாம் இந்த சீசனில் நடக்கிறது. நீ சம்பளம் வாங்குகிறாய் தானே... அப்போ கன்டென்ட் என்ற ரீதியில் இப்படி மட்டமான கேம்தான் இப்போதிருக்கும் போட்டியாளர்களில் மாயா, பூர்ணிமா, பிரதீப், ஐஷூ செய்கிறார்கள். இதைத்தான் நான் பிடிக்கவில்லை என்று சொல்கிறேன்.
வீட்டிற்குள் நுழைந்த முதல் நாள் நீங்கள் பிரதீப்புடன் வாதம் செய்து நீங்கள் கேப்டன்சியை வாங்கியது பாராட்டப்பட்டது. ஆனால், அதன் பிறகு அமைதியாக என்ன காரணம்?
நான் பிரதீப்புடன் வாதம் செய்து கேப்டன்சியை வாங்கியதுதான் ஹெல்தியான கேம் என்று நினைக்கிறேன். ஆனால், அதற்கு பிறகு வீட்டிற்குள் நடந்த விளையாட்டு முறை எனக்குப் பிடிக்கவில்லை. அங்கு பலரும் என்னை மட்டம் தட்டி எனக்குப் பின்னால் பேசியதால் உண்மையில் நான் மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டேன். அதனால் அமைதியாகி விட்டேன். பிக் பாஸ் என்ற விளையாட்டையும் தாண்டி என்னுடைய மனநலன் முக்கியம் என்று நினைத்தேன். ஆனாலும், அந்த விளையாட்டில் என் முழு திறமையைக் காட்ட முடியாமல் போனது வருத்தம்தான்.
நிக்சன் உங்களை பாடி ஷேமிங் செய்து பேசிய வீடியோவைப் பார்த்தீர்களா?
நாம் பொம்மைகள் கிடையாது. நமக்குத் தேவையான விஷயத்தை மாற்றிக்கொள்ள. எனக்கு நிக்சன் ஆரம்பத்தில் பேசிப் பழகிய விதம் எல்லாம் என் தம்பி ஒருவனை நியாபகப்படுத்தியது. ஆனால், போகப் போக அவன் என்னை அதிகம் கிண்டல் பண்ணினான். இதுகுறித்து அவனிடம் வார்ன் செய்து நாமினேட் கூட செய்தேன். அதன் பிறகு, ஒருநாள் நிக்சன் என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்டான். அது அவன் என்னை பாடி ஷேமிங் செய்ததற்காகத்தான் என்பது எனக்கு அப்போது தெரியாது. வெளியே வந்து வீடியோ பார்த்த பிறகு எனக்கு வருத்தமாக இருந்தது. அவனுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். என் அன்பை இழந்து விட்டான் நிக்சன்.
பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது சரிதான் என்று நினைக்கிறீர்களா? பூர்ணிமா-மாயாதான் அவரை வெளியேற்றி விட்டார்கள் என்று சலசலப்பு கிளம்பியதே?
ஒரு வகையில் அது உண்மைதான். நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே...பிக் பாஸ் வீட்டில் இந்த சீசன் விளையாட்டு பிடிக்கவில்லை என்று. அதில் மாயா-பூர்ணிமா விளையாட்டு முறையும் வரும். பிரதீப் சில தகாத வார்த்தைகளை பேசினார்தான். பலரையும் மட்டம் தட்டிப் பேசுவார்தான். ஆனால், பிரதீப்பை விட நிக்சனின் விளையாட்டு முகம்சுளிக்க வைக்கிறது. நியாயமாகப் பார்த்தால் அவனின் விளையாட்டைப் பற்றி நிச்சயம் கமல் சார் கேட்க வேண்டும்.
இந்த சீசனில் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர்கள் யார் யார்?
ஜோவிகாவின் விளையாட்டு பிடித்திருக்கிறது. விசித்ரா மேம் ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் செட் ஆகவில்லை. ஆனால், இப்போது அவருடைய வயதுக்கேற்ற விளையாட்டை சரியாக விளையாடி வருகிறார். அடுத்தது ரவீனா.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்