
நிஜத்திலும் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களிலும் வித்தியாசம் காட்டக்கூடியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தயாள் பத்மநாபன் இயக்கத்தில் ‘கொன்றால் பாவம்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் வரலட்சுமி, இந்தப் படம் தொடர்பாகவும், அவருடைய சினிமா பயணம் குறித்தும் ’காமதேனு’வுக்காக பேசினார். இனி, அவரது பேட்டி.
தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறீர்களே..?
அதுதானே ஒரு நடிகையாக எனக்கு முக்கியம். அந்த விதத்தில், ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் ஒரு நடிகையாக எனக்கு திருப்தி அளித்த ஒன்று. ஏனெனில், நடிப்பதற்கு அந்த அளவுக்கு இடமளித்த படம் இது. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகி விருதுகளையும் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் இயக்குநர் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்திருக்கிறேன்.
எனது கதாபாத்திரத்திற்கான மேக்கப், உடை போன்றவற்றை எடுத்துக் கொண்டாலே அந்த கதைக்குள்ளும் கதாபாத்திரத்திற்குள்ளும் வந்துவிடுவேன். குறிப்பாக, இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எனக்கு நடிப்பதற்கு சவாலாக இருந்தது. அழுதுகொண்டே, தன் தவறை உணர்ந்து அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க வேண்டும். இதுபோன்ற தருணங்கள்தான் இந்தப் படத்தில் நடிகையாக எனக்குத் திருப்தி கொடுத்தது.
திடீரென அதிக உடல் எடையை குறைத்துள்ளீர்கள். இதனால் இணையத்தில் உங்கள் தோற்றம் குறித்து வரும் கேலிகளை கவனித்து வருகிறீர்களா?
உடல் என்பது என் உரிமை. நடிகை என்பதற்காக இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உடல் எடை அதிகமாகிக் கொண்டே போனதால், சில உடல்நலப் பிரச்சினைகளையும் நான் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. மேலும், இப்போது நான் ஹைதராபாத்தில்தான் தங்கி இருக்கிறேன். படப்பிடிப்பு, வேறு ஏதும் முக்கிய விஷயங்கள் என்றால் மட்டுமே சென்னை வந்து போகிறேன். அப்படி இருக்கும்போது தெலுங்கு சினிமாக்களுக்கு என்று சில விஷயங்கள் தேவைப்படுகிறது. அதற்காகவும் உடல் எடையைக் குறைத்தேன். எனவே, யார் என்ன சொன்னாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்காக நீங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புவதைச் செய்யுங்கள்.
சமந்தாவும் நீங்களும் நெருங்கிய தோழிகள். எப்படி இருக்கிறார் சமந்தா?
சமந்தா என்றாலே பாசிட்டிவ்தான். எவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்தாலும் அதில் இருந்து தைரியமாக எப்படி மீண்டு வருவது என்பதை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். சமீபத்தில் கூட சமந்தாவிடம் பேசினேன். அவர் முன்பை விட தைரியமாக இருக்கிறார். உடல் நலனில் வேகமாகவும் முன்னேறி வருகிறார். பழையபடி, படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளத் தயாராகி வருகிறார். ரசிகர்களின் அன்பு அவரை நிச்சயம் பழையபடி கொண்டு வரும்.
ரிலேஷன்ஷிப் குறித்து வரலட்சுமியின் கருத்து..?
நல்ல விஷயம்தானே! நீங்கள் என்னுடைய திருமணம், ரிலேஷன்ஷிப் குறித்து கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு எனக்கேற்ற சரியான நபரை சந்திக்கவில்லை. திருமணமே செய்துகொள்ளாதே என்று கூட பல சமயங்களில் அப்பா என்னிடம் விளையாட்டாகச் சொல்வார். சின்ன வயதில் இருந்தே நான் ஒரு சுதந்திரமான பெண். அப்படித்தான் நான் வளர்ந்தேன். நல்லது கெட்டது என எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக சொல்லிவிடக்கூடிய ஆள் நான். அதனால், என் விருப்பம் இல்லாமல் என் பெற்றோரும் திருமணம் குறித்தான விஷயத்தில் என்னைக் கட்டாயப்படுத்தமாட்டார்கள்.