பாபா மறு வெளியீட்டில் சுஜாதாவை நினைவுகூர்ந்த ரசிகர்கள்

சுஜாதா பிறந்தநாள் டிச.10
பாபா மறு வெளியீட்டில் சுஜாதாவை நினைவுகூர்ந்த ரசிகர்கள்

ரஜினியின் பிறந்தநாளை(டிச.12) முன்னிட்டே பாபா திரைப்படத்தின் ரீ-ரிலிஸ் இன்று(டிச.10) அமைந்தது. ஆனால் அது இன்னொரு நட்சத்திரத்தை நினைவுகூரும் வகையில் சேர்ந்தது ஆச்சரியம். அந்த நட்சத்திரம் நடிகை சுஜாதா.

இலங்கையில் பிறந்து கேரளத்தில் வளர்ந்து, அங்கே நாடகம், திரைப்படம் என கலைவாழ்க்கையை தொடங்கிய சுஜாதா, கே.பாலச்சந்தரால் ’அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்துக்காக தமிழில் அறிமுகம் செய்யப்பட்டார். ’கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும்..’ பாடலில் இளம் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். அந்த கண்களிலும் அவரது சகல பாவனைகளிலும் எப்போதும் குடிகொண்டிருக்கும் மென்சோகம் சுஜாதாவின் தனி அடையாளமானது. அதே பாடலில் இடம்பெறும் ‘என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்’ வரிகள் போலவே அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் அமைந்ததும் இன்னொரு விசித்திரம்.

காதல் திருமணம், இரண்டு குழந்தைகள் என நிறைவான வாழ்க்கை வெளித்தெரிந்தாலும், சுஜாதாவின் மென்சோகம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பீடித்திருந்தது மறுக்க முடியாதது. அவருக்கான திரைப்பட வாய்ப்புகள் அதனால் பாதிக்கப்பட்ட போதும், அனைத்தையும் மீறி கொடி பறக்க விட்டார் சுஜாதா. கடல்மீன், அந்தமான் காதலி, தீர்ப்பு, தீபம், விதி என சுஜாதா நடித்த திரைப்படங்கள் எதுவும் ரசிகர்களால் மறக்க முடியாதது. 70 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர், அதன் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமானார். கமல், சோபன்பாபு, சிரஞ்சீவி, மோகன்பாபு என மரத்தை சுற்றிப் பாடிய நாயகர்களுக்கு, பின்னாளில் அக்கா, அம்மா என்று நடித்தபோதும் ரசிகர்களிடம் அதற்கான பாதிப்பை உண்டாக்கியது சுஜாதாவுக்கே உரிய தனிச்சிறப்பு!

இதயநோய் பாதிப்பில் அவர் 2011-இல் இறந்தபோது தமிழகத்தை பீடித்திருந்த தேர்தல் ஜூரத்தால், அவரது ரசிகர்கள் பலருக்குமே சுஜாதா மறைவு தெரியாமல் போனது. இன்றிருந்தால் சுஜாதா 70 வயதில் அடியெடுத்து வைத்திருப்பார். பாபா ரீ-ரிலிஸ் பரபரப்பின் மத்தியிலும் ரஜினியின் அம்மாவாக தோன்றிய சுஜாதாவின் பிறந்தநாளை ரசிகர்கள் நினைவுகூர்ந்ததும் சுஜாதாவுக்கே நேரும் ஆச்சரியங்களில் ஒன்றாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in