`என் வாழ்க்கை மாறியதற்கு இவர்தான் காரணம்'- பூரிக்கும் கே.ஜி.எஃப் நாயகி

`என் வாழ்க்கை மாறியதற்கு இவர்தான் காரணம்'- பூரிக்கும் கே.ஜி.எஃப் நாயகி

``கே.ஜி.எஃப் படத்துக்கு என்னைத் தேர்வு செய்ததால், வாழ்க்கை மாறியிருக்கிறது'' என்று நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்து சூப்பர் ஹிட்டாகியுள்ள படம், 'கே. ஜி. எஃப்: சாப்டர் 2’. இதில் யாஷ், ராக்கி பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவர் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாந்த் நீலுடன் ஸ்ரீநிதி ஷெட்டி
இயக்குநர் பிரசாந்த் நீலுடன் ஸ்ரீநிதி ஷெட்டி

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் கடந்த 14-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது இந்தப் படம். இந்நிலையில் இந்தப் படத்தின் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, தன் வாழ்க்கையை மாற்றியவர் இயக்குநர் பிரசாந்த் நீல் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில், ``உங்கள் சொந்த முடிவுகள், வாழ்க்கையை மாற்றி கனவுகளைத் தொட உதவும் போது, சில நேரம் மற்றவர்களின் முடிவும் அரிதாக அதைச் செய்யலாம். இயக்குநர் பிரசாந்த் நீல் என்னைத் தேர்வு செய்தார். என் வாழ்க்கை மாறியிருக்கிறது. நன்றி பிரசாந்த் சார், எல்லாவற்றுக்கும்!’ என்று தெரிவித்துள்ளார்.

கே.ஜி.எஃப் 1 மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி, தமிழில் விக்ரமுடன் ’கோப்ரா’ படத்தில் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.