தமிழ் திரையுலகுக்கு கிடைத்த கொடை நீங்கள்!'

பத்மஸ்ரீ ’சவுக்கார்’ ஜானகியை குறித்து நாசர் நெகிழ்ச்சி பதிவு!
சவுக்கார் ஜானகி
சவுக்கார் ஜானகி

குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்ம விருதுகளைப் பல்வேறு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்திய அரசு அறிவித்தது. அதில் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையுமான ’சவுக்கார்’ ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

இந்த விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, “தேசிய அளவில் கொடுக்கும் விருதுகளுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. அதனால், விருது குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியாக ஏற்கிறேன் என்று சொன்னேன்” என்று ’சவுக்கார்’ ஜானகி தெரிவித்து இருந்தார். 90 வயதான ’சவுக்கார்’ ஜானகி சிவாஜி கணேசன், எம்ஜிஆர், நாகேஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

’சவுக்கார்’ படம் மூலம் அறிமுகமானவர்:

’சவுக்கார்’ ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நடிகர் நாசர் தன்னுடைய வாழ்த்துச் செய்தியை ’சவுக்கார்’ ஜானகிக்கு பகிர்ந்துள்ளார்.

நடிகை ‘சவுக்கார் ஜானகி தன் 14 வயதிலேயே, மேடை நாடகம் மூலம் நடிப்பு துறையில் கால் பதித்தவர். தன்னுடைய 18 வயதில் 1949-ம் ஆண்டில் ‘சவுக்கார்’ எனும் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 3000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். கலையுலகுக்கு அவர் செய்திட்ட அறப்பணிகள், சாதனைகள் ஏராளம். மொழிகள் தாண்டி கணக்கிலடங்கா வெள்ளிவிழா வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் நாசர்
நடிகர் நாசர்

81 வயதைக் கடந்தும் சமீபத்தில் வெளியான நடிகர் கார்த்தியின் ‘தம்பி’, கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’ படம் வரையிலும் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார். கலையுலக பொக்கிஷமான நடிகை சவுக்கார் ஜானகி அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது கவுரவம் கிடைத்துள்ளதை, தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் சார்பில் வாழ்த்துகள் என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

நடிகர் நாசர் ‘சவுக்கார்’ ஜானகிக்கு தன்னுடைய வாழ்த்தை கவிதை நடையில் தெரிவித்துள்ளார். அதன் சாரம்சம், “அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத முத்துகளாய் பல நூறு படங்களை கொடுத்துள்ளீர்கள். ஒரு படத்தில் நடிப்பது போல, மற்றொன்றில் நீங்கள் இல்லை. உங்கள் நடிப்பையும் படத்தின் கதாபாத்திரங்களையும் பார்த்து ரசிக்க கண்கோடி வேண்டும். ’புதிய பறவை’யில் உங்களின் மிரட்டிய மிரண்டு போன நடிப்பு இப்போதும் ஆச்சரியம்தான். உங்கள் சிரிப்பும் அதில் தெரியும் அன்பும் பாசமும் இன்னும் சிறப்பானது. நீங்கள் எங்களுக்கு முத்து முத்தாய் கொடுத்த ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கோர்த்து அந்த முத்துமாலைக்கு பதக்கமாய் இப்போது ‘பத்மஸ்ரீ’ விருது கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்குப் பெருமை. தமிழ் திரையுலகுக்கு கிடைத்த கொடை நீங்கள். என்றென்றும் நீடூழி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். ’பத்மஶ்ரீ’ விருது அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்“ என அந்த செய்திக்குறிப்பில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் நடிகர் நாசர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in