22 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ரன், லைலா கூட்டணியில் உருவாகும் படம்

நடிகை சிம்ரன், லைலா
நடிகை சிம்ரன், லைலா22 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ரன், லைலா கூட்டணியில் உருவாகும் படம்

தமிழ் திரையுலகில் 1990’களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த நடிகைகள் சிம்ரன், லைலா இருவரும் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சப்தம்’ படத்தில் தற்போது நடிகை சிம்ரனும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளார்.

’ஈரம்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் ஆதி மற்றும் தமன் வெற்றிக்கூட்டணியில் உருவாகும் ’சப்தம்’ படத்தில் நடிகை சிம்ரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முன்னதாக இப்படத்தில் நாயகியாக, நடிகை லட்சுமி மேனன் இணைந்தார். அதற்கடுத்து முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இணைந்த நிலையில் தற்போது நடிகை சிம்ரன் இணைந்திருப்பது, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லைலாவும், சிம்ரனும் முன்னதாக ’பார்த்தேன் ரசித்தேன்’, ’பிதாமகன்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் இந்தக்கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. ’ஈரம்’ படத்தின் வெற்றிக்கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை எழுதி இயக்குவதுடன் தயாரிப்பாளராகவும் தன் புதிய பயணத்தை துவங்கியுள்ள இயக்குநர் அறிவழகன் ஆல்ஃபா பிரேம்ஸ் நிறுவனம் சார்பில், 7ஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சிவா உடன் இணைந்து, இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in