நடிகையர் திலகம்: திரை வானில் ஒரே நிலா, ஒரே சூரியன், ஒரே சாவித்திரி!

- நடிகையர் திலகம் சாவித்திரி பிறந்தநாள் பகிர்வு
சாவித்திரி
சாவித்திரி

அந்த நடிகையின் வீட்டில், திரும்பும் திசையெல்லாம் ஷீல்டுகள். கேடயங்கள். பதக்கங்கள். ஆனால், அழகை தொலைத்திருந்தார். சேமித்த சொத்துகளும் கரைந்து விட்டிருந்தன. ஷீல்டுகள் போலவே, அந்த வீட்டில் வறுமையும் குடிகொண்டிருந்தன. அப்போது பார்த்து, அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு ரசிகருக்கு பணத்தேவை. இவருக்கும் பணம் தேவைதான். ஆனாலும் தன்னை நம்பிக்கொண்டு வந்துவிட்டாரே என்று இரண்டு மணி நேரம் கழித்து வரச்சொன்னார். அதற்குள் அந்த ஷீல்டுகளையும் பீரோ முழுக்க இருந்த விலையுயர்ந்த பட்டுப்புடவைகளையும் விற்றார். பத்தாயிரம் ரூபாய் கிடைத்தது. அந்த ரசிகருக்கு சிரித்த முகத்துடன் அந்த ரூபாயை வழங்கி அனுப்பிவைத்தார். அந்த முகமும் சிரிப்பும்தான் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வசீகரத்தின் அடையாளம். நடிப்பிலும் பண்பிலும் அடையாளமாகத் திகழ்ந்த அந்த மகாநடிகை... நடிகையர் திலகம் சாவித்திரி.

சாவித்திரியின் முகமே வசீகரம். கண்களே கதை பேசும். அவரின் உச்சரிப்பு, தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்ததான உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். ஒருவார்த்தை கூட, ஒரு எழுத்து கூட பிசிறின்றி, அட்சர சுத்தமாக தமிழில் அழகுறப் பேசுகிற வித்தைதான் சாவித்திரி எனும் நடிகையின் விந்தைகளில் ஒன்று!

ஆந்திரம்தான் பூர்விகம். தெலுங்குதான் தாய்மொழி. பிறந்த போது ‘சரசவாணி தேவி, சரசவாணி தேவி, சரசவாணி தேவி’ என மூன்று முறை அப்பா சொல்ல, அம்மா சொல்ல, வளர்ந்தவர், திரையுலகிற்கு வந்ததும் ‘சாவித்திரி, சாவித்திரி, சாவித்திரி’ என்று மொத்த ஆந்திரமும் தமிழகமும் சொல்லிக் கொண்டாடியதுதான் அந்த மனுஷிக்குள் நிறைந்து கிடந்த கலைத்திறன்.

சிஸ்டா பூர்ணய்யா சாஸ்திரிகளிடம் இசையும் நடனமும் கற்றுக்கொண்டார். மேடையேறினார். நடனமாடினார். அந்த நடனத்தில் நளினமும் நடிப்பும் ஒளிர்ந்து ஜொலித்தன. இயக்குநர் எல்.வி.பிரசாத் இயக்கத்தில், நாகிரெட்டியின் தயாரிப்பில், என்.டி.ராமாராவுடன் ‘கல்யாணம் பண்ணிப்பார்’ எனும் படத்தில் அறிமுகமானார் சாவித்திரி. தமிழிலும் தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பு அவருக்குக் கிடைத்தது.

மிகப்பெரிய எழுத்தாளரான சரத் சந்திர சட்டர்ஜியின் கதையை, மிகப்பிரபல இயக்குநர் வேதாந்தம் ராமையா இயக்கினார். நாகேஸ்வர ராவ் நாயகனாக நடித்தார். சாவித்திரிதான் நாயகி. 1953-ம் ஆண்டு வெளிவந்தது இந்தப் படம். சாவித்திரியை எல்லோரும் பார்வதி எனும் கதாபாத்திரமாகவே பார்த்தார்கள். அவருடைய நடிப்பைப் பார்த்தும் அவருக்கு நேர்ந்திருக்கும் நிலையைக் கண்டும் கண்ணீர்விட்டார்கள். நாகேஸ்வர ராவை அந்தக் கதாபாத்திரமாகவே பார்த்தார்கள். இந்தப் படம் வெளியாகி, 70 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் ‘தேவதாஸ்’ எனும் காதலில் தோற்ற காவியம் நம் மனதில் வெற்றிக்கொடி பறக்க கம்பீரமாக இருக்கிறது.

அவ்வளவுதான். சாவித்திரியை தங்கள் காதலியாகவே பார்த்தார்கள் ரசிகர்கள். வரிசையாக படங்கள் வந்தன. ’மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் இவரின் நடிப்பு பேசப்பட்டது. கொண்டாடினார்கள் ரசிகர்கள். ‘கல்யாணம் பண்ணிப்பார்’, ‘மனம் போல் மாங்கல்யம்’ என்றெல்லாம் நடித்தவரின் வாழ்வில் இல்லற சுகம் என்பது இருந்தும் இல்லாமலேயே போனது என்பது பெருஞ்சோகம். இந்தப் படத்தில்தான் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் ஜோடி சேர்ந்தார்கள். பிறகு வரிசையாக படங்கள் வந்துகொண்டே இருந்தன.

’குணசுந்தரி’ படம் இன்னொரு வகையில் பெயர் வாங்கிக் கொடுத்தது. ‘மாமன் மகள்’ கலகல நடிப்பிலும் அசத்துவார் என்று பாராட்டின பத்திரிகைகள். ‘மிஸ்ஸியம்மா’ வந்தது. அந்தக் கதாபாத்திரத்துக்கு அப்படியொரு ஜீவனைக் கொடுத்தார் சாவித்திரி. இந்த தருணங்களுக்கு முன்னதாகவே ஜெமினிக்கும் சாவித்திரிக்கும் மனம் ஒருமித்தது. காதலானார்கள். திருமணமும் செய்துகொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்ந்தார் சாவித்திரி.

ஜெமினி கணேசன் எத்தனை நடிகைகளுடன் நடித்தாலும் சாவித்திரிதான் பொருத்தமான ஜோடி என்றார்கள். சாவித்திரி எத்தனை நடிகர்களுக்கு நாயகியாக நடித்தாலும் ஜெமினி - சாவித்திரி ஜோடிதான் சூப்பர் என்றார்கள். ஆக, ஜெமினியும் சாவித்திரியும் இணைந்து பல படங்களைக் கொடுத்தார்கள்.

காதலின் அடையாளப் படமாக ‘தேவதாஸ்’ எப்படித் திகழ்ந்ததோ, அப்படித்தான் இயக்குநர் சந்தானபாரதியின் தந்தை சந்தானம் தயாரித்து சிவாஜியுடன் நடித்த ‘பாசமலர்’ அண்ணன் - தங்கைப் பாசத்தை நம் கண்முன்னே நிறுத்தியது.

படம் பார்த்த ரசிகர்கள் தங்களின் அண்ணனாகவே சிவாஜியையும் தங்களுடைய உடன் பிறந்த சகோதரியாகவே சாவித்திரியையும் பார்த்தார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையாக எத்தனையோ நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அந்த நடிகைகளுக்கெல்லாம் இப்படியாக ஏதோவொரு ‘அடைமொழிப் பெயர்’ கிடைத்திருக்கிறது. ஆனால் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு இணையாக இரண்டே இரண்டு நடிகையருக்கு மட்டுமே அப்படியொரு அடைமொழி கிடைத்தது. ஆச்சி என்று கொண்டாடப்படும் மனோரமாவை ‘பொம்பள சிவாஜி’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையாக ‘நடிகையர் திலகம்’ என்று இன்றைக்கும் சாவித்திரியைப் போற்றிக்கொண்டிருக்கிறோம்.

‘பாசமலர்’ படத்தில் ஒருபக்கம் அண்ணன் மீதான பாசம், கணவர் மீதான காதல், கணவரின் குடும்பத்தார் செய்யும் சூழ்ச்சி என்று சகலத்தையும் பொறுத்துக்கொண்டு, துக்க ஏக்கங்களை, தோற்றுவிட்ட தன் வாழ்வை, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான பாவனைகளால் நமக்கு உணர்த்தி, நம்மை உலுக்கியெடுத்துவிடுவார் சாவித்திரி.

1957-ம் ஆண்டு வெளியான ‘மாயாபஜார்’ எஸ்.வி.ரங்காராவுக்கும் ‘கல்யாண சமையல் சாதம்’ பாடிய திருச்சி லோகநாதனுக்கும் மட்டும் பெயர் பெற்றுத்தரவில்லை. சாவித்திரியின் நடிப்பைக் கண்டு மிரண்டு போனார்கள் ரசிகர்கள். தெலுங்கிலும் தமிழிலும் வந்த இந்தப் படத்தில், அப்படியொரு மாயாஜால நடிப்பை வழங்கியிருப்பார் சாவித்திரி.

எம்ஜிஆருடன் ‘மகாதேவி’ நடித்தார். வாளெடுத்து சண்டை போடுவதில் தன் நடிப்பைக் காட்டினார். 1952-ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு வருடமும் சாவித்திரியின் படங்கள் வந்துகொண்டேதான் இருந்தன. சில இயக்குநர்களை தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்று சொல்லுவார்கள். பட்ஜெட்டை குறைவாகச் சொல்லி, அதைவிடக் குறைவான செலவில் படமெடுப்பவர்களை அப்படிச் சொல்லுவார்கள். அதேபோல சாவித்திரியை, தயாரிப்பாளர்களின் நடிகை என்றும் இயக்குநர்களின் நடிகை என்றும் சொல்லுவார்கள். படப்பிடிப்புக்கு வந்துவிட்டால், சிவாஜியைப் போல் கண்ணும்கருத்துமாக ஒருநாளில் எவ்வளவு நடித்துக் கொடுத்துவிடமுடியுமோ நடித்துக் கொடுத்துவிட்டுப் போகிற குணம் சாவித்திரியின் பேரன்புகளில் ஒன்று!

வசனகர்த்தா ஆரூர்தாஸ் மீது ஜெமினிக்கும் சாவித்திரிக்கும் தனி மரியாதை. “சிவாஜி அண்ணன் படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு கிடைச்சா போதும். உங்க திரையுலக வாழ்க்கை ஓஹோன்னு வந்துரும் தாஸண்ணே” என்று சொன்னதுடன் இல்லாமல், சிவாஜியிடம் ஆரூர்தாஸை அழைத்துக் கொண்டு, “அண்ணே, இவர் நல்லா வசனம் எழுதுறாருண்ணே” என்று சிபாரிசு செய்து, ‘பாசமலர்’ படத்தில் எழுதும் வாய்ப்பை ஆரூர்தாஸுக்கு வழங்கிக் கொடுத்தார்கள் ஜெமினியும் சாவித்திரியும்!

1960-ம் ஆண்டு ஏவி.எம்மின் ‘களத்தூர் கண்ணம்மா’ வந்தது. குழந்தை நட்சத்திரமாக கமல் அறிமுகமான இந்தப் படத்தில் ஜெமினியின் யதார்த்த நடிப்பையும் சாவித்திரியின் துக்கத்தின் வெடிப்பையும் கண்டு உருகிக் கரைந்தார்கள் ரசிகர்கள். ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’ படத்திலும் கலைஞரின் வசனத்தில் உருவான ‘குறவஞ்சி’ படத்திலும் தன் வசன உச்சரிப்பால் தெறிக்கவிட்டுக் கலக்கினார் சாவித்திரி.

’பார்த்தால் பசி தீரும்’ படத்தில் ஜெமினியின் முதல் மனைவியாகவும் கமலுக்கு அம்மாவாகவும் பார்வையற்ற நிலையில் தவித்து மருகும் காட்சிகளெல்லாம் பார்த்துவிட்டு, சாவித்திரியைத் தவிர வேறு எவரையும் நினைக்கவே முடியாது நம்மால்! ’பாவமன்னிப்பு’ படத்திலும் ‘படித்தால் மட்டும் போதுமா’ படத்திலும் ‘பாதகாணிக்கை’ படத்திலும் எத்தனையெத்தனை மாறுபட்ட குணச்சித்திரங்கள்? அத்தனையிலும் அசத்துகிற பேராற்றலும் பெருந்திறனும் கொண்டு ஜொலித்தார் சாவித்திரி.

இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘கற்பகம்’ தலைப்பின் நாயகி கே.ஆர்.விஜயாவாக இருந்தாலும் கணவரிடம் இருந்தும் குழந்தையிடம் இருந்து அன்பைப் பெறுவதற்கு சாவித்திரியின் துடிப்பு நடிப்பாக மட்டுமே இருக்காது. பெண்மையும் குழந்தைமையும் கொண்ட கதாபாத்திரமென்றாலே ‘கைகொடுத்த தெய்வம்’ சாவித்திரி நமக்கு முன்னே நின்று ஒரு குழந்தையைப் போல கபடமின்றி சிரித்துவிட்டுப் போவார்.

’கொஞ்சும் சலங்கை’ சாவித்திரிக்கு இன்னொரு மகுடம். பாடகி எஸ்.ஜானகியின் முதல் பாடல், சாவித்திரிக்குப் பாடியதுதான். ‘சிங்கார வேலனே தேவா’ பாடலை இன்றைக்குக் கேட்டாலும் சாவித்திரியின் பாவனைகளில் சொக்கிப்போவோம்.

சிவாஜியின் 100-வது படம், ‘நவராத்திரி’... இது சிவாஜிக்காக எடுத்த படமா, சாவித்திரிக்காக எடுத்த படமா என்று குழம்பித்தான் போவோம். அந்த அளவுக்கு இருவரும் சரிசமமாகப் போட்டி போட்டுக்கொண்டு கலக்கியெடுத்திருப்பார்கள். சாவித்திரியின் திரைவாழ்வில், ஆகச்சிறந்த படங்கள் எனும் நீண்ட பட்டியலில் ‘நவராத்திரி’க்கு தனியிடம் உண்டு. அதே இயக்குநர் ஏ.பி.நாகராஜன் உமையவளாக ‘திருவிளையாடல்’ படத்திலும் கலைமகளாக ‘சரஸ்வதி சபதம்’ படத்திலும் சக்தியாகவே, அம்பாளாகவே, தேவியாக அருள் மழை நடிப்பில் நம்மை நனைய விட்டிருப்பார். ‘சரஸ்வதி சபதம்’ படத்தின் நிறைவு நாள் படப்பிடிப்பில், ஆரத்தியெடுத்து, திருஷ்டி வளித்து சாவித்திரியின் நடிப்பை படப்பிடிப்பு அரங்கே வியந்து கொண்டாடியது.

’வேட்டைக்காரன்’, ‘பரிசு’ என்று எம்ஜிஆருடனும் பல படங்களில் நடித்து அசத்தினார் சாவித்திரி. கண்ணதாசன் தயாரித்த ‘இரத்தத்திலகம்’ படத்தின் போராளி கேரக்டர் எவராலும் அவ்வளவு அசாத்தியம் காட்டி நடித்துவிடமுடியாது. ‘காத்திருந்த கண்கள்’ படத்தில் இரண்டு சாவித்திரி. இரண்டுக்கும் எத்தனையெத்தனை வித்தியாசங்கள் கொடுத்து பிரமிக்க வைத்திருப்பார்?

’கந்தன் கருணை’, ‘கர்ணன்’ என்றெல்லாம் நடித்தவர், தெலுங்குப் படம் ஒன்றை வம்படியாக தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்து சிவாஜியை அணுகினார். ‘’வேணாம்டாம்மா. இந்தப் படம் அங்கேயே சரியாப் போகலை. கதையும் திருப்தியா இல்ல’’ என்று சிவாஜி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால், சாவித்திரிக்குப் புரியவே இல்லை. ‘பிராப்தம்’ அப்படித்தான் வந்தது. படத்தைத் தயாரித்து இயக்கினார். மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது இந்தப் படம்.

“சாவித்திரி மாதிரி நடிக்கறதுக்கு ஆளே கிடையாது” என்று அந்தக் காலத்திலும் சொன்னார்கள். மூன்று தலைமுறை கடந்தும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ‘மகா நடி’ என்றும் ‘நடிகையர் திலகம்’ என்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பிறகு, பழைய சாவித்திரியின் படங்களைத் தேடித்தேடிப் பார்த்த லட்சக்கணக்கான ரசிகர்கள் அனைவரும் இளைஞர்கள்!

சினிமாவுக்கு நடிக்க வருகிற பெண்களில் பலரும் ‘சாவித்திரி மாதிரி நல்ல நடிகைன்னு நான் பேரெடுக்கணும்’ என்றுதான் நினைப்பார்கள்! அதெப்படி... ஊருக்கு ஊர் சூரியனுமில்லை; சந்திரனும் கிடையாது. ஒன்றே ஒன்றுதானே. சாவித்திரியும் அப்படித்தான்!

1936-ம் ஆண்டு பிறந்த நடிகையர் திலகத்தின் கடைசிக்காலங்கள், அவர் வாழ்வின் துக்கப்பக்கங்கள். அவை எவருக்கும் நிகழவே கூடாது என்பதற்கான உதாரணங்கள். நடிப்பிலும் வாழ்விலும் உதாரணத்துக்கு சாவித்திரியை ஏற்று வழிநடக்கலாம். 1981-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26-ம் தேதி சாவித்திரி காலமானார். அப்போது அவருக்கு 45 வயது. 1936-ம் ஆண்டு, டிசம்பர் 6-ம் தேதி பிறந்த நடிகையர் திலகம் சாவித்திரிக்கு 86-வது பிறந்தநாள்.

சாவித்திரியின் திறமையைப் போற்றும் வகையில் தபால்தலையெல்லாம் வெளியிட்டு கெளரவித்திருக்கிறது அரசாங்கம். இதையெல்லாம் கடந்து மக்கள் தங்கள் மனங்களில் அந்த கருகரு கருணைவிழிகளும் குண்டு முகமும் குழந்தைச் சிரிப்புமாக இருக்கும் சாவித்திரியை, தபால்தலையைப் போல, பச்சக்கென்று ஒட்டிவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சந்திர சூரியர்கள் போல சாவித்திரி எனும் நட்சத்திரம் சாதாரண நட்சத்திரம் அல்ல. ‘மகா நடிகை’ என்றும் ‘நடிகையர் திலகம்’ என்றும் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டே இருக்கிற உச்ச நட்சத்திரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in