மீண்டு(ம்) வந்தார் சமந்தா!

மீண்டு(ம்) வந்தார் சமந்தா!

நடிகை சமந்தா, தனது உடல் நிலை குறித்தான வதந்திகளை பொய்யாக்கி, மீண்டும் திரையுலக பணிகளுக்கு திரும்பியிருக்கிறார்.

மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக படுக்கையில் சுருண்ட நடிகை சமந்தா, சற்று இடைவெளிக்குப் பின்னர் பணிகளுக்கு திரும்பி உள்ளார். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே நாகசைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார் சமந்தா. ஆனால் அந்த வாழ்க்கை கசந்ததில் இருவரும் சட்டப்படி பிரிந்தனர். சமந்தா வாழ்க்கையில் முதல் அடியாக இந்த விவாகரத்து விவகாரம் உருவானது.

தெலுங்கு சினிமாவின் பாரம்பரிய அக்கினேனி குடும்பத்துடனான உறவை துண்டித்து கொண்டதில், ரசிகர்களின் தூற்றலுக்கு அதிகம் ஆளானார். ஆனபோதும் அவற்றை நிதானம் இழக்காது கடந்து வந்தார். திரை வாய்ப்புகள் மீண்டும் கதவைத் தட்டியதில் உற்சாகமாக ஏற்றுக்கொண்டார். திரையில் தோன்றிய சமந்தாவை ரசிகர்களும் கொண்டாடினார்கள். ஆனால் அடுத்த அடி உடல் நோவாக வெளிப்பட்டது.

அரிய வகை தசை அழற்சி நோயான மயோசிடிஸ் பாதிப்புக்கு ஆளானார் சமந்தா. இது அவரை படுக்கையில் கட்டிப்போட்டது. தனது பாதிப்பு குறித்து தாமதமாக ரசிகர்களுக்கு தெரிவித்த போதும், வெளிப்படையாக நடந்து கொண்டார் சமந்தா. திரை நட்சத்திரங்கள், பொதுவாக நடிகையர் தங்கள் தேக பாதிப்புகளை பொதுவெளியில் தெரிவிக்க மாட்டார்கள். சக நடிகர்களை விட நடிகையர் சில காலம் மட்டுமே திரை வானில் மின்னி உதிர்வது வழக்கம் என்பதும் இதற்கு முக்கிய காரணம்.

ஆனால் சமந்தா வெளிப்படையாக இருந்ததோடு, அதற்கான பரிதாபம் எதையும் எதிர்பாராது தன்னுடைய மிதமிஞ்சிய தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார். இதன் இன்னொரு பக்கமாய், சமந்தாவால் மயோசிடிஸ் குறித்த விவாதங்கள் மற்றும் விழிப்புணர்வுகள் பொதுவெளியில் அதிகம் பரவின. அந்த வகையில் சமந்தா அதிகமானோரால் கொண்டாடப்பட்டார்.

இதற்கிடையே உடல்நல பாதிப்பு அதிகமானதில் ரசிகர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றார். தொடர்ந்து சமந்தா உடல்நிலை மோசமானதாகவும், மேல்சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. சமந்தா குறித்த இந்த தகவல்கள் அவரது ரசிகர்களை பரிதவிப்பில் ஆழ்த்தின.

சுறுசுறுப்பான அப்டேட்ஸ் மத்தியில் சதா திளைத்திருக்கும் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கமும் காற்றுவாங்கியது. இடையில் ஓரிரு பதிவுகள் அவர் பெயரில் வெளியானபோதும், அவற்றில் சமந்தா இல்லாததும் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. திடீரென புத்தாண்டு வாழ்த்துக்கு காட்சியளித்தவர், நேற்று சாகுந்தலம் திரைப்படத்துக்கான டப்பிங் ஸ்டில்லை வெளியிட்டார். இந்நிலையில் இன்று காலை மும்பை விமான நிலையத்தில் காட்சியளித்துள்ளார்.

கருப்பு கண்ணாடி, வெண்ணிற ஆடைகள் என தோற்றம் தந்த சமந்தா, உடல் மெலிந்தும், சோர்வாகவும் தென்பட்டார். ஆனபோதும் ரசிகர்கள் மத்தியில் செல்ஃபி மற்றும் போஸ்களில் உற்சாகம் குறையாது பங்கெடுத்தார்.

சமந்தா நடிப்பில் பிப்.17 அன்று வெளியாகவிருக்கும் சாகுந்தலம் திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் சமந்தாவும் பங்கெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ட்ரெய்லர் ஜன.9 அன்று வெளியாக உள்ளது. தெலுங்கு திரைப்படமான சாகுந்தலம், தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியாக உள்ளது. விஷூவல் ட்ரீட் வாய்ப்புள்ள இந்த திரைப்படம் ’3டி’ பதிப்பாகவும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in