டைரக்டர் பேச்சால் கண்கலங்கிய நடிகை சமந்தா: டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?

நடிகை சமந்தா.
நடிகை சமந்தா.

‘சாகுந்தலம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா இன்று கலந்து கொண்டார்.

’யசோதா’ படத்திற்குப் பிறகு நடிகை சமந்தாவின் ‘சாகுந்தலம்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. சமந்தா, தேவ் மோகன் உள்ளிட்டப் பலர் இதில் நடித்திருக்கின்றனர். 3டி-யில் உருவாகி இருக்கக்கூடிய இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.

இன்று மதியம் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், மையோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த சமந்தா படத்தின் புரோமோஷன் மற்றும் பட வெளியீட்டு விழாக்களில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் வந்தடைந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர்போர்ட்டில் சமந்தாவின் வருகை மற்றும் இன்ஸ்டாவில் அவரது அடுத்தடுத்த பதிவுகளால் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர்.

இந்த நிலையில், இன்று படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபத்தில் படக்குழுவினரோடு கலந்து கொண்டார் சமந்தா. இதில் இயக்குநர் குணசேகர் பேசும்போது," இந்தப் படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து பொருளாதார ரீதியாக உந்துதல் கொடுத்த தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி" என்று கூறினார். மேலும், நடிகை சமந்தாவை இந்தப் படத்தின் சூப்பர் ஸ்டார் எனவும் குறிப்பிட்டார். இதெல்லாம் கேட்ட நடிகை சமந்தா மேடையிலேயே கண்கலங்கினார்.

இதை அடுத்து பேச வந்த சமந்தா, " சிலருக்கு சினிமா என்பது வாழ்க்கையின் அங்கம். ஆனால், குணசேகர் சாருக்கு அது உலகம். இந்தப் படத்திற்கு அவர் உயிர் கொடுத்துள்ளார். அதற்கு அவருக்கு கிடைக்கும் அன்பைக் காணவே இங்கே வந்தேன். எனக்கு ‘சாகுந்தலம்’ கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. பல கஷ்டங்கள் என் வாழ்க்கையில் நான் சந்தித்து இருக்கலாம். ஆனால், சினிமா மீது நான் கொண்டுள்ள காதல் மட்டும் மாறவில்லை. சினிமாவும் என்னை எந்த அளவிற்கு திருப்பி நேசிக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். இந்த அன்பு ‘சாகுந்தலம்’ படம் மூலம் இன்னும் அதிகரிக்கும்" என நெகிழ்ச்சியாக பேசினார் சமந்தா. டிரெய்லர் மேடையில் சமந்தா கண்ணீர்விட்டு அழும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in