'அவரை மட்டுமே நம்பி வந்தேன்... ஆனால்? ’: தற்கொலை செய்த நடிகையின் டைரியில் பகீர் தகவல்

'அவரை மட்டுமே நம்பி வந்தேன்... ஆனால்? ’: தற்கொலை செய்த நடிகையின் டைரியில் பகீர் தகவல்

தற்கொலை செய்துகொண்ட நடிகையின் வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ள டைரியில் பல பகீர் தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

கேரள மாநிலம், காசர்கோடு செருவத்தூரைச் சேர்ந்தவர் ஷஹானா (20). மாடலாக நடித்ததை அடுத்து கவனம் பெற்ற இவர், மலையாளம், தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் ’லாக்டவுன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். கடந்த வருடம் சஜாத் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ஷஹானா, கோழிக்கோடு பரம்பில் பஜாரில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ஜன்னல் கிரில்லில் தூக்குமாட்டிய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். போலீஸார் அவர் தற்கொலை செய்துகொண்டதை உறுதி செய்தனர்.

அவர் தற்கொலைக்கு கணவரும், அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என ஷஹானாவின் தாய் புகார் கூறியிருந்தார். பின்னர் சஜாத் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கஞ்சாவும், எம்டிஎம்ஏ, எல்எஸ்டி போன்ற போதை மருந்துகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சஜாத் வீட்டில் இருந்து ஷஹானா எழுதிய டைரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. திருமணமாகி 20 நாட்களில் இருந்தே அவர் டைரி எழுதத் தொடங்கி இருக்கிறார்.

அதில், தன்னைக் கணவரும், அவர் குடும்பத்தினரும் துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும், பட்டினிப்போட்டதாகவும் தெரிவித்துள்ளார். சில நாட்களில் வெறும் இரண்டு ரொட்டித் துண்டுகளை மட்டுமே சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

’எனக்கு யாருமில்லை. காரணம் இல்லாமல் கணவர் அடிக்கிறார். இந்த வீட்டில் அவரை மட்டுமே நம்பி வந்தேன். அவர் என்னைப் புரிந்துகொள்ளவே இல்லை. இந்த வீட்டில் எனக்கு எந்த மதிப்பும் இல்லை. நான் சுத்த வேஸ்ட். கணவர் கூட என்னை ஆதரிக்காதது வருத்தமாக இருக்கிறது’ என்று ஒரு குறிப்பில் அவர் எழுதியிருக்கிறார்.

மற்றொரு குறிப்பில், ’என்னை கணவர் அதிகமாக அடித்து விட்டார். என் குடும்பத்தினரிடமும் சண்டைப் போட்டார். இப்படியே போனால் நான் உயிரோடு இருக்க மாட்டேன். அம்மா எதுவும் சொல்லவில்லை. என் அம்மா, என்னை நேசித்த அளவுக்கு யாருமே என் மீது அன்பு செலுத்தவில்லை’ என்று கூறியுள்ளார். அதோடு வீட்டின் பொருளாதாரச் சிக்கல்களையும் ஆரம்பத்தில் இருந்தே மன உளைச்சலுக்கு ஆளான நிலையையும் அதில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட நடிகை சஹானாவின் இந்த டைரி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in