
திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாகி அழகுப் பதுமையாகவே வலம் வராமல் தனது திறமையை நிரூபித்த நடிகை ரோஜா இன்று ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சர். அவரின் 51வது பிறந்தநாள் நாளைக் கொண்டாடுகிறார். அவர் குறித்தான சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.
ஆந்திரா மாநிலம், திருப்பதியில் நாகராஜ ரெட்டி மற்றும் லலிதா தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர் ரோஜா. இவருக்கு குமாரசுவாமி ரெட்டி மற்றும் ராம்பிரசாத் ரெட்டி என இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பொலிட்டிக்கல் சயின்ஸில் கல்லூரிப் படிப்பை முடித்த ரோஜா சினிமாவில் நுழைவதற்கு முன்பு குச்சுப்புடி நடனக்கலைஞராக வலம் வந்தார்.
1991-ம் ஆண்டு ‘பிரேம தப்பாஸு’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவரை தமிழில் ‘செம்பருத்தி’ படம் மூலமாக அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. குண்டு கண்கள், நேர்த்தியான சிரிப்பு, திறமையான நடிப்பு என முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார ரோஜா.
’செம்பருத்தி’ படத்திற்குப் பிறகு ‘சூரியன்’, ‘உழைப்பாளி’, ‘மக்கள் ஆட்சி’, ‘ஏழையின் சிரிப்பில்’, ‘என் ஆசை ராசாவே’ என ரஜினி, சிவாஜி, பிரபுதேவா, மம்மூட்டி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகி வரிசையில் வந்தார் ரோஜா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல கமர்ஷியல் வெற்றிப் படங்களைக் கொடுத்தார் ரோஜா.
தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் செல்வமணியுடனேயே காதல் வயப்பட்டுத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அழகில் ரோஜாவை அப்படியே நகலெடுத்திருக்கும் மகளை சினிமாவுக்கு எடுத்து வரவேண்டும் என்பது செல்வமணி- ரோஜாவின் விருப்பம். ஆனால், மகளுக்கோ விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதுதான் கனவாம்.
சினிமாவில் நடித்து வந்தாலும் பொலிட்டிக்கல் சயின்ஸ் மாணவிக்கு அரசியல் ஆசையும் விடவில்லை. 1999-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் பிரிவான தெலுங்கு மஹிளாவில் தலைவர் பதவி கிடைத்தது. ஆனால், அங்கு அவருக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை, அரசியல் பணிக்கு குறுக்கீடுகள் என்ற ஏராளமான இடையூறுகள் இருந்தது.
அங்கிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால், அங்கும் இதே நிலை தொடர ஒருக்கட்டத்தில் அரசியலை விட்டே விலகிவிடலாம் என்று எண்ணினார் ரோஜா. அப்போதுதான் 2011-ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது.
அங்கு உடனே தன்னை இணைத்துக் கொண்டார் ரோஜா. அதில் இருந்து அவரின் அரசியல் கிராஃப் அதிரடியாக உயர்ந்தது. அரசியல் பயணத்தில் பாராட்டுகளைப் போலவே ரோஜா மீது பல சர்ச்சைகளும் உண்டு.
சந்திரபாபு நாயுடுவுடன் ரோஜாவுக்கு அதிக முரண் இருந்தது போலவே, ஜெகன் மோகன் ரெட்டியுடன் நல்ல நட்பும் அவருக்கு இருந்தது. கட்சியில் சேர்ந்ததில் இருந்தே அவருக்கு பல முக்கிய பதவிகளைக் கொடுத்து ஊக்குவித்தார் ஜெகன் மோகன். இப்போது ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சராக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் ரோஜா.
தனக்கு அரசியலில் பெரும் முன்மாதிரி என நடிகை ஜெயலலிதாவைக் குறிப்பிடுவார் ரோஜா. அவரது பாணியிலேயே சினிமாவை விட்டு விலகி தற்போது அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் ரோஜா. என்ன தான் அரசியலில் ரோஜா ஈடுபட்டிருந்தாலும் சினிமாவில் நடிக்கும் ஆசையும் உள்ளூர அவருக்கு உண்டு என்கிறார் அவரது கணவரும் இயக்குநருமான செல்வமணி.