‘செம்பருத்தி’ டு ‘ரோஜா’: ‘ரோஜா’ டு ‘அமைச்சர்!’

நடிகை, அமைச்சர் ரோஜாவின் 50-வது பிறந்தநாள் பகிர்வு
‘செம்பருத்தி’ டு ‘ரோஜா’: ‘ரோஜா’ டு  ‘அமைச்சர்!’

ஆந்திராவில் இருந்தும் கேரளத்தில் இருந்தும் பல நடிகைகள், தமிழ்த் திரைப்படங்களில் நடித்து உச்சம் தொட்டிருக்கிறார்கள். இன்றைக்கு படங்களில் நடிக்காவிட்டாலும் கூட, அவர்களின் பெயரை இன்றைய தலைமுறையினரும் சில நடிகர்களை, நடிகைகளைக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள். 90-களின் தொடக்கத்தில் அப்படியொரு நடிகை ஆந்திரத்தில் இருந்து நமக்குக் கிடைத்தார். மனங்களில் மணம் வீசும் நடிகையாக ரோஜா இன்றைக்கும் கொண்டாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’ முதலான மெகா வெற்றிப் படங்களைக் கொடுத்து மிகப்பெரிய இயக்குநராக வளர்ந்திருந்த தருணம் அது. 1990-ம் ஆண்டு ‘புலன் விசாரணை’ எடுத்தார். 1991-ம் ஆண்டு ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை இயக்கினார். 1992-ல்கோவைத்தம்பியின் மதர்லாண்ட் பிக்சர்ஸ், ஆர்.கே.செல்வமணியை ஒப்பந்தம் செய்தது. அந்தப் படத்துக்கு நாயகிக்கான தேர்வில்தான் லதா ரெட்டியை சந்தித்தார். கதாபாத்திரத்துக்கு சரியான நபர் இவர்தான் என்று முடிவு செய்து நடிக்கவைத்தார். அந்தப் படத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் போதே, ‘இவர் இந்தப் படத்துக்கு மட்டுமில்லை, நம் வாழ்க்கைக்குமே சரியான நபர்’ என இருவரும் முடிவு செய்தார்கள். மனம் ஒருமித்து காதலித்தார்கள். ‘செம்பருத்தி’ படத்தில் லதா ரெட்டியை ‘ரோஜா’வாக்கினார்.

முதல் படமே ரோஜாவை எல்லோருக்கும் பிடிக்கும் படமாக அமைந்தது. வரிசையாகப் படங்கள் வரத் தொடங்கின. அதே வருடத்தில், கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில், பவித்ரன் இயக்கத்தில் சரத்குமாருடன் ‘சூரியன்’ படத்தில் நடித்தார். ரோஜாவை இன்னும் ரசித்தார்கள். கொண்டாடத் தொடங்கினார்கள்.

1993-ம் ஆண்டும், 1994-ம் ஆண்டும் ரோஜாவுக்கு ஜாக்பாட் காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ’உழைப்பாளி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியானவர், அடுத்த வருடமே பஞ்சு அருணாசலம் தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘வீரா’ படத்திலும் இணைந்து நடித்தார். இரண்டு படங்களிலுமே ரோஜாவின் நடனமும் நடிப்பும் பேசப்பட்டன. மளமளவென முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தார் ரோஜா.

இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் ‘சரிகமபதநி’ படத்தில் மிகச்சிறந்த கேரக்டர் கிடைத்தது. அற்புதமாகப் பண்ணியிருந்தார். ஒருபக்கம் பிரபுதேவாவுடன், இன்னொரு பக்கம் பிரபுவுடன், மற்றொரு பக்கம் சத்யராஜுடன் என பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டே வந்தார் ரோஜா.

அப்போதெல்லாம் ஹீரோவின் மார்க்கெட் பார்க்கப்படுகிற வழக்கம் போலவே ஹீரோயின் மார்க்கெட் வேல்யூவும் பார்க்கப்பட்டன. ரோஜாவின் மார்க்கெட் வேல்யூ பி அண்ட் சி சென்டர்களில் எகிடுதகிடாக ஏறிக்கொண்டே இருந்தது.

பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்துடன் ‘தமிழ்ச்செல்வன்’ படத்தில் மிகச்சிறந்த கேரக்டரைக் கொடுத்தார் இயக்குநர். அதைத் தன் அருமையான நடிப்பால் அசத்திக்காட்டினார் ரோஜா. இராம.நாராயணன் படங்களிலும் நடித்தார். கஸ்தூரி ராஜா படத்திலும் நடித்தார். ’பொட்டு அம்மன்’ படத்தில் துர்கையாக நடித்து தெறிக்கவிட்டார். பிறமொழிகளிலும் நடிக்க வந்த வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டு தெலுங்கிலும் இவருக்கு வரவேற்பு கிடைத்தன. குறிப்பாக, இவரின் தமிழ்ப் படங்கள் அங்கே ‘டப்’ செய்யப்பட்டபோது, அந்தப் படங்களைக் கொண்டாடினார்கள் ரசிகர்கள்!

இளையராஜாவின் மகள் பவதாரிணி ஆகச்சிறந்த பாடகி. ‘ராசய்யா’ படத்தில், ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல் ரோஜாவுக்காகப் பாடினார். பிரபுதேவாவுக்கும் ரோஜாவுக்கும் நல்ல காம்பினேஷன் ஒர்க் அவுட்டானது. ‘ஏழையின் சிரிப்பில்’ படத்தில் ரோஜாவின் கதாபாத்திரம் நம்மை நெகிழவைத்துவிடும்.

வி.சேகரின் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, டி.ராஜேந்தரின் ‘சொன்னால்தான் காதலா’ என்று வெரைட்டியான படங்களில் நடித்து தன் முத்திரையைப் பதித்துக் கொண்டே இருந்தார். ஒரேயொரு பாடலுக்கு ரோஜா ஆடினாலும் படத்துக்கு மார்க்கெட் வேல்யூ கூடும் என்று திரையுலகம் இவரை அணுகியதெல்லாம் நடந்தது.

இந்தத் தருணத்தில், மனதார விரும்பிய ஆர்.கே.செல்வமணியை மணம் புரிந்தார். அப்போதும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 1998-ம் ஆண்டு, ரோஜாவின் வாழ்வில் மறக்கமுடியாத, பொன்னான ஆண்டு என்றுதான் சொல்லியாக வேண்டும். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமனின் படைப்பாக வெளிவந்த ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ திரைப்படம் ரோஜாவை மிகச்சிறந்த, பிரமாதமான நடிகை என்று எல்லோராலும் கொண்டாடும் வகையில் அமைந்தது. ’ராதா’ எனும் கதாபாத்திரமாகவே வாழ்ந்தார். ஒருபக்கம் கார்த்திக், இன்னொரு பக்கம் அஜித் என இருவருக்கும் போட்டியாக நடித்து, மிகப்பெரிய அளவுக்கு புகழைப் பெற்றார். அந்த வருடத்தின் சினிமா எக்ஸ்பிரஸ் சிறந்த நடிகைக்கான விருது இவருக்குக் கிடைத்தது.

ஒரு இடைவெளி. அப்போதுதான் ஆந்திர அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கினார். வருகிற படங்களை ஏற்றுக்கொள்ளவும் செய்தார். ‘சகுனி’, ’நினைத்து நினைத்துப் பார்த்தேன்’, ‘காவலன்’ முதலான படங்களை ஏற்றுக்கொண்டு நடித்தார். நடுவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வித்தியாசமான முறையில் தொகுத்து வழங்கினார்.

அங்கே... அக்கட தேசத்தில் அரசியலில் அடுத்தடுத்து முன்னேறினார். தேர்தலில் நின்றார். வென்றார். சட்டமன்ற உறுப்பினரானார். இப்போது அமைச்சராகவும் சிறப்புற பணியாற்றி வருகிறார்.

திரையுலகிலும் அரசியலிலும் தனக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு, அதில் அடுத்தடுத்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார். 1972 நவம்பர் 17-ம் தேதி பிறந்த ரோஜாவுக்கு, இன்று 50-வது பிறந்தநாள்.

விழா ஒன்றில் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, தனக்கும் ரோஜாவுக்கும் நிகழ்ந்த காதலை வெளிப்படையாகப் பேசினார். பிறகு ஒரு தருணத்தில், ‘இது சரியா வராதோ’ என்று இருவருமே நினைத்ததையும் பேசினார். பேச்சின் முத்தாய்ப்பாக, ’‘அப்போது நான் முடிவு செய்தேன். மனைவியிடம் தோற்றுப்போனால் பரவாயில்லை. மனைவியிடம் தோற்றுப் போனால், வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்’’ என்று சொல்லி பேச்சை நிறைவு செய்தார் ஆர்.கே.செல்வமணி. கரவொலிகளால் அரங்கம் அதிர்ந்தது.

சினிமா, அரசியல் கடந்து தன் சொந்த வாழ்க்கையிலும் அற்புத குணம் கொண்ட கணவரை அடைந்த ரோஜாவுக்கு, கூடை நிறைய ரோஜாக்களைக் கொடுத்து பிறந்தநாளில் வாழ்த்துவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in