
நடிகை ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ விவகாரம் இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அமிதாப்பச்சன், கீர்த்தி சுரேஷ், விஜய் தேவரகொண்டா எனப் பல பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இதுபோன்ற வீடியோக்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டீப் ஃபேக் டெக்னாலஜி மூலமாக ராஷ்மிகாவை தவறாக சித்தரிக்கும் வகையிலான வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டானது. உண்மையில் அந்த வீடியோவில் இருப்பவர் ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் வாழ் இந்தியப் பெண்.
இவரது வீடியோவைத் தான் ராஷ்மிகா மந்தனா போல இப்படி டீப் பேக் முறையில் எடிட் செய்துள்ளனர். அமிதாப் பச்சன் உள்ளிட்டப் பல பிரபலங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த விஷயம் கவனத்திற்குள்ளானது.
இப்படி தவறாக பிரபலங்களைச் சித்தரிப்பவர்களையும் இது போன்ற டெக்னாலஜியை தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்க நடவடிக்கை வேண்டும் என நடிகர் அமிதாப் பச்சன் முதற்கொண்டு இணையத்தில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
மேலும் போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்தது. ராஷ்மிகாவைப் போலவே கத்ரீனாவும் இப்படி மோசமாக போலி புகைப்படத்தால் சித்தரிக்கப்பட இதனையடுத்து, இந்த டீப் பேக் வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இன்று நடிகைகளுக்கும் நேரும் இந்த விஷயம் நாளை, சாதாரண பெண்களையும் பாதிக்கும். எனவே, பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், இது போன்ற வீடியோ வெளியிடும் நபர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.