`உங்க அறியாமை திகைப்பா இருக்கு’- அஜய் தேவ்கனுக்கு பிரபல நடிகை `நறுக்' பதில்

`உங்க அறியாமை திகைப்பா இருக்கு’- அஜய் தேவ்கனுக்கு பிரபல நடிகை `நறுக்' பதில்

``உங்க அறியாமை திகைப்பாக இருக்கிறது'' என்று நடிகர் அஜய் தேவ்கனுக்கு நடிகை ரம்யா பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘புஷ்பா, ‘ஆர்ஆர்ஆர்’, ‘கேஜிஎஃப்-2’ ஆகிய தென்னிந்திய திரைப்படங்கள் பான் இந்தியா படங்களாக வெற்றி பெற்றுள்ளன. வட இந்தியாவிலும் வசூலில் சாதனை படைக்கின்றன. இந்நிலையில் விழாவில் ஒன்றில் பேசிய கன்னட நடிகர் சுதீப், ’’இந்தி நமது தேசிய மொழி அல்ல” என்று கூறியிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ‘சகோதரர் கிச்சா! உங்களைப் பொறுத்தவரை இந்தி தேசிய மொழி அல்ல; பிறகு ஏன் உங்கள் தாய்மொழியில் எடுக்கும் படங்களை இந்தியில் வெளியிடுகிறீர்கள்? இந்தி இதற்கு முன்பும், எப்போதும் நமது தாய்மொழி; தேசிய மொழி. ஜன கண மன’ என இந்தியில் ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சுதீப், தான் வேறொரு கோணத்தில் அப்படிப் பேசியதாகவும் யாரையும் காயப்படுத்தவோ, விவாதத்தைக் கிளப்பும் வகையிலோ சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார். எல்லா மொழிகளையும் நேசிப்பதாகவும், அஜய் தேவ்கனை விரைவில் சந்திக்கும்போது இதுபற்றி விளக்கம் அளிப்பதாகவும் கூறியிருந்தார்.

மற்றொரு ட்வீட்டில், ‘நீங்கள் இந்தியில் அனுப்பிய கருத்தை புரிந்துகொண்டேன். ஏனென்றால், நாம் இந்தியை மதித்து, நேசித்து கற்றுக்கொண்டோம். தவறாக நினைக்க வேண்டாம் . ஆனால், எனது பதில் கன்னடத்தில் டைப் செய்யப்பட்டிருந்தால் சூழல் எப்படி இருந்திருக்கும் என நினைத்துப் பார்த்தேன். நாங்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தானே ’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த அஜய் தேவ்கன், ’சுதீப், நீங்கள் என் நண்பர். தவறான புரிதலைச் சரிசெய்ததற்கு நன்றி. நம் திரைத்துறையை எப்போதும் ஒன்றாகத்தான் நினைப்பேன். நாம் அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம். அதே நேரம் எங்கள் மொழியையும் மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஒருவேளை மொழிபெயர்ப்பில் ஏதோ தவறாகி இருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகை திவ்யா ஸ்பந்தனா என்ற ரம்யா, அஜய் தேவ்கனுக்கு அளித்துள்ள `நறுக்' பதிலில், ‘இந்தி, நம் தேசிய மொழியல்ல அஜய்தேவ்கன். உங்கள் அறியாமை திகைப்பாக இருக்கிறது. கே.ஜி.எப், புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்கள் இந்தி பேசும் பகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது, கலைக்கு மொழி தடையில்லை என்பதைக் காட்டுகிறது. உங்கள் படங்களை, நாங்கள் ரசிப்பது போல எங்கள் படங்களையும் ரசியுங்கள்’ என்று கூறியுள்ளார். கூடவே, இந்தி திணிப்பை நிறுத்துங்கள் (#stopHindiImposition) என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in