விலங்குகள் தொடர்பான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்: நடிகை ரம்யா

நடிகை ரம்யா
நடிகை ரம்யா

விலங்குகள் தொடர்பான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்று நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ஜெயநகரில், கடந்த மாதம் சாலையில் படுத்திருந்த லாரா என்ற நாய், விலை உயர்ந்த கார் ஏற்றிக் கொல்லப்பட்டது. தொழிலதிபர் ஆதிகேசவலு என்பவர் பேரன் ஆதி (23), அந்த நாயை கொல்வதற்காக அதன் மீது காரை ஏற்றும் சிசிடிவி காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.

இது தொடர்பாக, பத்ரி பிரசாத் என்பவர் அளித்த புகாரை அடுத்து ஆதி கைது செய்யப்பட்டார். இதில் படுகாயமடைந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி இறந்தது. நாயின் இறுதிச் சடங்கு பெங்களூரு சும்மனஹள்ளியில் உள்ள இடுகாட்டில் நடந்தது. இதில், விலங்குகள் நல ஆர்வலர்களுடன் நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனாவும் அதில் பங்கேற்றார். இவர் தமிழில், பொல்லாதவன், குத்து, வாரணம் ஆயிரம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், “விபத்துகள் நடப்பதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இந்த நாய் வேண்டுமென்றே கார் ஏற்றிக் கொல்லப்பட்டது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நம் நாட்டில் விலங்குகள் தொடர்பான சட்டங்கள் கடுமையானதாக இல்லை. அது கடுமையாக்கப் பட்டால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்” என்றார்.

’லாரா’ இறுதிச் சடங்கில் ரம்யா
’லாரா’ இறுதிச் சடங்கில் ரம்யா

இதையடுத்து இன்ஸ்டாகிராமில், “லாராவின் இறுதிச்சடங்கில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டதைப் பார்க்கும்போது எனக்கு நம்பிக்கை வந்தது. அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம். குரலற்றவர்களுக்கான அன்பையும் அக்கறையும் அவர்கள் பாதுகாப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களிடம் இருந்து உத்வேகம் பெற்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in