நடிகை பார்வதி நாயரின் ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன: வீட்டில் வேலை செய்த வாலிபர் பரபரப்பு பேட்டி

நடிகை பார்வதி நாயரின் ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன: வீட்டில் வேலை செய்த வாலிபர் பரபரப்பு பேட்டி

என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் நேரம் வரும்போது வெளியிடுவேன் என்று நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.

நடிகை பார்வதி நாயர் தன் வீட்டில் இருந்த விலையுயர்ந்த கைகடிகாரம், லேப்டாப், செல்போன் ஆகிய பொருட்களை வீட்டில் வேலை பார்த்து வந்த சுபாஷ் சந்திரபோஸ் திருடிச் சென்றதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்.

இதன் பேரில் சுபாஷ் சந்திர போஸ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடரந்து தன் மீது பொய் புகார் அளித்த நடிகை பார்வதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுபாஷ் சந்திரபோஸ், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து கடந்த வாரம் நடிகை பார்வதி நாயர் தனது புகாரின் மீது போலீஸார் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், காவல் துறையினர் ஒருதலைபட்சமாக விசாரணை நடத்துவதாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் சுபாஷ் சந்திரபோஸ் இன்று மீண்டும் ஒரு புகார் அளித்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’ நடிகை பார்வதி நாயரை நானும், எனது தந்தையும் தொடர்ந்து மிரட்டி வருவதாக பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார். என்னுடைய தந்தை இறந்து 5 வருடங்களான நிலையில் அவர் எப்படி மிரட்ட முடியும்? இதில் இருந்து நடிகை கூறுவது பொய் என நிரூபணமாகிறது. மேலும் நடிகை பார்வதி மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை. கடந்த அக்.19-ம் தேதி புகார் அளித்ததில் இருந்து போலீஸார் ஒரு தலைபட்சமாக என்னை மட்டுமே விசாரணை செய்து வருவதால் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன்" என்று கூறினார்

மேலும், "என்மீது போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை முற்றிலும் பொய்யானவை. தன்னிடம் பல ஆதாரங்கள் இருப்பதால்தான் பார்வதி நாயர் தன் மீது அடுக்கடுக்கான குற்றங்களைச் சுமத்தி வருகிறேன். மேலும் பார்வதி நாயரின் அந்தரங்க விஷயத்தை நான் வெளியில் சொல்லிவிடுவேன் என்ற பயத்தில் தொடர்ந்து பொய்ப் புகார் அளித்து வருகிறார். அதற்கான அனைத்து ஆடியோ ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. அவற்றை தகுந்த நேரத்தில் வெளியிடுவேன்" என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in