`நான் என்ன செய்தாலும் தப்பாகி விடுகிறது'- ஆதங்கப்படும் நயன்தாரா

`நான் என்ன செய்தாலும் தப்பாகி விடுகிறது'- ஆதங்கப்படும் நயன்தாரா

நடிகை நயன்தாரா தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கனெக்ட்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி நடிகை நயன்தாரா பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், “நான் திரைத்துறைக்கு நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. திரைத்துறையில் கதாநாயகர்களுக்கு இணையாக பெண்களும் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எப்போதுமே என் விருப்பமாக இருந்திருக்கிறது. படம் தொடர்பான நிகழ்வுகளுக்கு சென்றாலும் எப்போதுமே கதாநாயகர்களுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். அதனாலேயே, பெரும்பாலும் பட விழாக்களைத் தவிர்த்து விடுவேன். ’சிவாஜி’ படத்தில் ஒரு பாடலுக்கு நான் ஆட போனபோது கூட பலரும் வேண்டாம் என என்னைத் தடுத்தார்கள்.

ஆனால், அதை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் இப்போது வரையும் அந்த பாடல் பலருக்கும் பிடித்த ஒன்றாக மாறி இருக்கிறது. முன்பைவிட இப்போதுதான் என் மீது விமர்சனங்கள் அதிகம் வருகிறது. அதில் நான் என்ன தவறு செய்தேன் என்பது கூட பல சமயம் எனக்குத் தெரியாது. இப்போது கூட ‘கனெக்ட்’ படத்தில் என்னுடைய சில புகைப்படங்களைப் பார்த்து விட்டு பலரும் உடல் இளைத்ததாக விமர்சனம் செய்திருந்தார்கள். அந்த கதாபாத்திரத்திற்கு என்னத் தேவையோ என் இயக்குநர் என்ன கேட்டாரோ அதைத்தான் நானும் செய்திருக்கிறேன். நான் குண்டாக இருந்தாலும் எதாவது சொல்வார்கள்; இளைத்தாலும் எதாவது சொல்வார்கள். நான் என்ன செய்தாலும் தப்பாகி விடுகிறது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in