தலைமறைவாக இருக்கும் நடிகை மீரா மிதுன்: கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்

தலைமறைவாக இருக்கும் நடிகை மீரா மிதுன்: கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளதாக சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

திரைப்படத்துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தது. பின்னர் இருவரும் ஜாமீன் பெற்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மீரா மிதுனும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து, சாட்சி விசாரணையன்று குற்றம்சாட்டபட்டவர் மற்றும் அவரது வழக்கறிஞர் யாரும் ஆஜராகாதது நீதிமன்றத்தை ஏமாற்றுவதாக உள்ளது என தெரிவித்த நீதிபதி, நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தார்.

அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருக்கிறார் என்றும் அவரை விரைவில் கண்டுபிடித்து ஆஜர்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in