கண்களால் கதைபேசும் மீனா!

நடிகை மீனா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

கண்களால் கதைபேசும் மீனா!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிற்காலத்தில் திரையில் ஜொலித்தவர்கள் மிகக்குறைவுதான். குட்டி பத்மினி, ஸ்ரீதேவி மாதிரி சில நடிகைகள் நம் மனதில் அப்படியே தங்கிவிடுகின்றனர். அந்த நடிகையும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான். ஆனால் அந்தச் சமயத்தில், மளமளவென படங்களெல்லாம் வரவில்லை. அடுத்தகட்டத்தில் வளர்ந்து நாயகியாக நடித்தபோது, எல்லோரும் திரும்பிப் பார்க்கும்படியான நடிகையாக வளர்ந்து உயர்ந்து ஜெயித்து நின்றார். இன்றைக்கும் அவருக்கு தனித்த அடையாளமும் செல்வாக்கும் இருக்கத்தான் செய்கிறது. எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளிலும் அன்றைக்கு இருந்த எல்லா நடிகர்களுடனும் நடித்துக் கலக்கிய அவர்... மீனா!

நடிகர் விஜயகுமார் சொந்தமாகப் படம் தயாரித்தார். அந்தப் படத்தை மேஜர் சுந்தர்ராஜன் இயக்கினார். சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘நெஞ்சங்கள்’, 1982-ம் ஆண்டு வெளியானது. சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்கள். நடிகை லட்சுமி நடித்திருந்தார். அப்போது, இந்தப் படத்தை எவரும் அவ்வளவாகக் கவனிக்கவில்லை. அதனால் படத்தில் நடித்த சிறுமியையும் கவனிக்கத் தவறினார்கள்.

இரண்டு வருடங்கள் கழிந்தன. அதாவது 1984-ல், கே.நட்ராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்த படம் வந்தது. படத்தின் தலைப்பிலேயே ரஜினிகாந்த் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, எல்லோரும் முதலில் கொண்டாடியது அந்தச் சிறுமியைத்தான். வசனம் பாதி பேச, மீதியைக் அவரின் கண்களே பேசிவிட... ’கண்ணு மீனு மாதிரி இருக்கு. பாந்தமான லட்சணமான பொண்ணுப்பா’ என்று தங்கள் வீட்டுப் பெண் போல திருஷ்டி வளித்துக் கொண்டாடினார்கள்.

ஆனால், அந்தச் சிறுமி, பின்னாளில் பெரிய நடிகையாவார் என்று யாருக்குத்தான் தெரியும்? சிறுமி மீது அன்பு செலுத்தி ஆதரவு கொடுத்த ரஜினிக்கு, அந்தச் சிறுமியே பிற்காலத்தில் ஜோடியாக நடிப்பார் என்பதை ரஜினியே கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். அம்மா ராஜ்கோகிலா போல, நாமும் சில படங்கள் நடித்துவிட்டு காணாமல் போய்விடும் என்று அந்தச் சிறுமி நினைத்திருக்கலாம். ஆனால் காலம் மீனாவைக் கைப்பிடித்து கோடம்பாக்கத்தில் நீண்டகாலம் உலவவிட்டது.

சினிமாவில் இடம் கிடைப்பது சிரமம். அதில் தடம் பதிப்பது இன்னும் கஷ்டம். இந்த இரண்டையும் அழகாகப் பிடித்துக்கொண்டு முன்னேறினார் மீனா. 1976-ல் பிறந்த மீனா, தன் ஆறாவது வயதில் சிவாஜியுடன் ‘நெஞ்சங்கள்’ படத்தில் நடித்தார். எட்டாவது வயதில், ரஜினியுடன் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் நடித்தார். முதல் படத்திலும் முத்தாய்ப்பான நடிப்பைத் தந்த மீனா, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் மாற்றுத் திறனாளியாகவும் நடித்து இன்னும் அசத்தினார்.

படத்துக்கு பத்து நிமிட இடைவேளை போல, மீனாவின் திரைவாழ்வில் சில வருட இடைவெளி. ஆனால் நிமிட இடைவேளை இல்லை. வருட இடைவெளி. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து, அற்புதமான வாசல் திறக்கப்பட்டது.

விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்த ராஜ்கிரண் அப்போது நாயகனாக அறிமுகமாகிறார். படத்தின் இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு முதல் படமும் கூட. இளையராஜாவின் இசையில் அந்த கிராமத்துப் படம்... சிட்டிபட்டிதொட்டி என எல்லா இடங்களிலும் கலெக்‌ஷன் அள்ளியது. 1991-ம் ஆண்டு வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ எனும் அந்தப் படத்தை இன்னும் நம்மால் மறக்க முடியாது. குறிப்பாக, வெள்ளந்தியாக முகத்தை வைத்துக்கொண்டு, ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ என்று நடித்த மீனாவையும் அவரின் நடிப்பையும் கண்டு, தங்கள் மனசிலே நிலைநிறுத்திக் கொண்டார்கள் ரசிகர்கள்! கதாநாயகியாக மீனா நடித்த முதல் படம் இதுதான்! முதல் படமே வெள்ளிவிழாப் படமாக அமைந்தது.

இதன் பின்னர், கோடம்பாக்கத்தின் இயக்குநர்கள், மீனாவின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். வரிசையாக படங்கள் வரத்தொடங்கின. தெலுங்கிலும் நடிக்க அழைத்தார்கள். மலையாளப் பக்கமும் கால்பதித்தார். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல், நடிக்கத் தெரிந்தோருக்கு செல்லும் மொழியெல்லாம் சிறப்பு எனப் பேரெடுத்தார் மீனா.

ஏவி.எம் நிறுவனம் ஒரு படம் எடுக்க வேண்டும் என ரஜினியின் கால்ஷீட்டை வைத்துக்கொண்டு, இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரை அழைத்தது. அவர், மீனாவை அழைத்துவந்தார். அந்தப் படம் ‘எஜமான்’. படம் பெரும் வெற்றி பெற்றது.

பின்னர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தெலுங்கு ரீமேக் படத்தை நிறையவே மாற்றி, ரஜினிகாந்தை பொருத்தினார்கள். பஞ்சு அருணாசலம் தயாரிப்பில், ‘வீரா’வாக உருவான அப்படத்தில் மீனாவும் ரோஜாவும் நடித்தார்கள். அந்தப் படமும் வெற்றி!

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ மீனாவாக இல்லாமல், கனமான கதாபாத்திரங்களைக் கூட வெகு இயல்பாகவும் அழகாகவும் நடித்து அசத்தினார். அப்போது இருந்த நடிகையர் பலருக்கும் டப்பிங் குரல்தான். மீனாவே சொந்தக் குரலில் பேசியதும், அந்தக் குரலில் இருந்த மேஜிக்கும் கூட கூடுதல் கவனம் ஈர்க்கக் காரணமாக அமைந்தது.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெள்ளிவிழாப் படமாக அமைந்தது ‘நாட்டாமை’. அட்டகாச நடிப்பில் எல்லோரையும் கவர்ந்தார். போதாக்குறைக்கு, ‘மீனாப்பொண்ணு மீனாப்பொண்ணு’ என்று அவர் பெயரிலேயே பாட்டும் வர, இன்னும் உயரம் தொட்டார். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்தார் ரஜினி. கே.பாலசந்தர் தயாரிப்பில், ரவிக்குமார் இயக்கிய ‘முத்து’ படத்திலும் மீனா நாயகியானார். இந்தப் படத்தில், கூடுதல் அழகுடன் ஜ்வலித்தார் மீனா.

வெறுமனே சும்மா வந்துபோகிற கதாபாத்திரங்களெல்லாம் மீனாவுக்குக் கிடைக்கவில்லை. மீனாவின் நடிப்பைப் பறைசாற்றுகிற விதமாகவே படங்கள் அமைந்தன. ஏ,பி, சி, என எல்லா ஏரியாக்காரர்களுக்கும் பிடித்த நாயகியாக, முக்கியமான ஹீரோயினாக வளர்ந்துவிட்டிருந்தார். அன்றைய தேதியில் இருந்த ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார், பார்த்திபன் என எல்லோருடனும் நடித்தார். பின்னாளில், கமலுடன் ‘அவ்வை சண்முகி’யில் நடித்தார். சரத்குமாருடன் ‘நாட்டாமை’, ‘ரிஷி’ முதலான படங்கள், கார்த்திக்குடன் ‘அரிச்சந்திரா’ முதலான படங்கள், அஜித்துடன் ‘ஆனந்தப்பூங்காற்றே’ மாதிரியான படங்கள் எனக் கலக்கியெடுத்தார் மீனா. விஜய்யுடன் ‘சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்’ என்று ஒரேயொரு பாடலுக்குக் குத்தாட்டம் போட்டார்.

மாடர்ன் உடை, பாவாடை தாவணி, புடவை என எதை உடுத்தினாலும் அதற்குத் தகுந்தபடியும் கதாபாத்திரத்தின் தன்மைக்குத் தக்கபடியும் தன் பாடி லாங்வேஜ் மாற்றிக்கொண்டு பிரமிப்பூட்டினார்.

இயக்குநர் சேரனின் முதல் படமான ‘பாரதி கண்ணம்மா’வையும் அதில் மீனாவின் நடிப்பையும் மறக்கவே முடியாது. படத்தில் இவர் பேசும் வசனங்கள் குறைவுதான். மீதத்தையெல்லாம் அவரின் கண்கள் பேசிக்கொண்டே இருக்கும். சேரனின் ‘பொற்காலம்’ படத்தில் முரளியுடன் நடித்தார். ஆகச்சிறந்த நடிப்பைக் கொடுத்து அசத்தியிருந்தார்.

கமலுடன் ‘அவ்வை சண்முகி’யில் நடித்து, நடிப்பில் இன்னும் ஸ்கோர் அள்ளினார். காதலித்த கணவனை, குழந்தை பிறந்து வளர்ந்த நிலையில், விவாகரத்து வாங்கிவிட்டு, அப்பா பெண்ணாக, பணக்காரத்தனத்துடன் வலம் வரும் கேரக்டரைக் கூட அட்டகாசமாகச் செய்து பெண்களுக்கே பிடிக்கும் வகையில் நடிப்பில் தன் தனித்துவத்தை நிலைநாட்டினார்.

கே.பாக்யராஜ் இயக்கத்தில் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’யில் ராஜகுமாரியாகவே வாழ்ந்து காட்டியிருப்பார் மீனா. ‘வில்லன்’ படத்தில் மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கினாரென்றால், ‘சிட்டிசன்’ பட ப்ளாஷ்பேக் காட்சியில், மீனவப் பெண்ணாகவே மிரட்டியிருந்தார் மீனாப்பொண்ணு!

பார்த்திபனையும் முரளியையும் இணைத்து சேரன் எடுத்த ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில், மூன்றாவது முறையாக மீனாவை நடிக்கவைத்தார். முதிர்ச்சியான பொறுப்பான கதாபாத்திரத்தில் வெளுத்துவாங்கினார் மீனா. அவ்வளவு ஏன்... பிரபுதேவா நடிக்க, சுந்தர்.சி இயக்கத்தில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ படத்தில் பிரபுதேவாவுக்கு சமமாக கலாட்டாவிலும் கிளாமரிலும் காமெடியிலும் நடனத்திலும் மிரட்டியெடுத்து மலைக்கவைத்தார்.

கதையைத் தேர்வு செய்வதிலும் கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொள்வதிலும் மீனா மிக கவனமாக இருந்தார். இயக்குநர் வஸந்த் இயக்கத்தில், அர்ஜூன், ஜோதிகா நடித்த ‘ரிதம்’ படத்தை தன் நடிப்பால் கவிதை மாதிரி கொண்டு செல்ல உதவியிருப்பார் மீனா. ரமேஷ் அரவிந்துடனான காதலாகட்டும் அவர் இறந்த பின் மகனுடன் வாழ்கிற வாழ்வாகட்டும் அர்ஜுன் அவர் வாழ்வில் வந்த பிறகு அவரின் மன ஓட்டமாகட்டும்... படம் முழுக்க மீனாவின் ராஜாங்கம்தான்! ஒரு காட்சியில் ரமேஷ் அரவிந்த் சொல்வதைக் கேட்டுவிட்டு, லேசாகக் கண் கலங்குவார் மீனா. ’என்ன...’ என்று ரமேஷ் கேட்பார். ’ஒன்னுமில்ல... மை’ என்று சொல்லிவிட்டு, லேசாக உதிரும் கண்ணீரை ஒற்றை விரலால் துடைத்தபடி மெல்லிசாகச் சிரித்து நம் மனங்களை கனக்கச் செய்துவிடுவார்.

மலையாளத்தில் இவர் நடித்த ‘த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’ என இரண்டுமே நடிப்பிலும் வெற்றிபெற்றார் மீனா. எவ்வளவு ஆழமான கேரக்டராக இருந்தாலும் அதை அசால்ட்டாகச் செய்து பேரெடுப்பதுதான் மீனாவின் ஸ்பெஷல்!

அம்மா ராஜ்மல்லிகாவை விட ஏகப்பட்ட படிகள் உயர்ந்து தனித்ததொரு அடையாளத்துடன் திகழ்கிறார் மீனா. இன்றைக்கு மூன்றாவது தலைமுறையாக அவரின் மகள் நைனிகாவும் நடிக்கவந்திருக்கிறார். இன்றுவரை மீனாவின் இடத்தை, எந்த நடிகையும் பிடிக்கவில்லை. அவரின் குரலின் தனித்துவமும் பேசும் கண்களும் வித்தியாசமானவை!

செப்டம்பர் 16-ம் தேதி மீனாவின் பிறந்தநாளில் அவரை வாழ்த்துவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in