1 கோடி ரூபாய் கடன் வழங்கிய நிதி நிறுவனம் மீது நடிகை மதுவந்தி பரபரப்பு புகார்: என்ன காரணம்?

1 கோடி ரூபாய் கடன் வழங்கிய நிதி நிறுவனம் மீது நடிகை மதுவந்தி பரபரப்பு புகார்: என்ன காரணம்?

சீல் வைத்த வீட்டிலிருந்து காணாமல் போன 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மீட்டு தருமாறு நடிகை மதுவந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி, தற்போது பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து 1 கோடி ரூபாய் கடனாக பெற்று, ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனி 2-வது குறுக்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கினார். சில தவணைகள் கட்டிய மதுவந்தி பின்னர் கடன் தொகை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார். கடன் தொகை 1.21 கோடி ரூபாயை செலுத்துமாறு பலமுறை பைனான்ஸ் நிறுவனம் மதுவந்திக்கு நோட்டீஸ் அனுப்பியும் கண்டுக்கொள்ளாததால், பைனான்ஸ் நிறுவனம் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டை பூட்டி சீல் வைத்து பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுவந்தியின் வீட்டை போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர் பைனான்ஸ் நிறுவனம், மதுவந்தி வீட்டை வேறொரு நபருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூட்டி சீல் வைத்த வீட்டிலிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனதாகவும் அதனை மீட்டு தரக்கோரி மதுவந்தி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் சீல் வைக்கப்பட்ட வீட்டிலிருந்த பொருட்களை ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும் என பைனான்ஸ் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும், ஆனால் பொருட்களை எடுப்பதற்குள் வீட்டினை மற்றொருவருக்கு ஏலத்தில் விற்று விட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் வீட்டிலிருந்த தனக்கு சொந்தமான பொருட்களை பைனான்ஸ் நிறுவனம் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் பதுக்கி வைத்துள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடன் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பைனான்ஸ் கம்பெனியின் மண்டல மேலாளர் உமாசங்கர், கார்த்திகேயன் உட்பட 10 நபர்கள் அனுமதியின்றி இதனை செய்துள்ளதாகவும், உடனே தனக்கு சொந்தமான 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மீட்டு தர வேண்டும் என மதுவந்தியின் சார்பில் அவரது வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in