நடிகை லட்சுமி : கேரக்டருக்கு உயிர் கொடுத்த நடிப்பு ராட்சஷி!

- 70-வது பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
நடிகை லட்சுமி : கேரக்டருக்கு உயிர் கொடுத்த நடிப்பு ராட்சஷி!

இந்தக் கதாபாத்திரத்தை இவர் செய்திருந்தால்தான் நன்றாக இருக்கும் என்றும் இந்தக் கேரக்டரை இவரைத் தவிர வேறு எவருமே செய்யமுடியாது என்றும் பெயர் எடுப்பது என்பதுதான் ஒரு நடிகருக்கான, நடிகைக்கான ஆகச்சிறந்த திறமை. அப்படியான திறமைமிக்க கலைஞர்கள், நம்மில் பலர் இருக்கிறார்கள். தன் குரலாலும் முகபாவனைகளாலும் சிரிப்பாலும் அழுகையாலும் அந்தக் கற்பனைக் கதாபாத்திரத்துக்குக் கூட உயிர் கொடுத்து உலவவிட்டுவிடுவார்கள். அதனால்தான் நாவல்களில் உள்ள கதாபாத்திரங்களுக்குள் நாம் ஐக்கியமாகிவிடுகிறோம். அப்படி எடுத்துக்கொண்ட கேரக்டருக்கு உயிர் கொடுத்து உலவவிட்டவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர்.

அப்பா ஆந்திரத்தில் பிரபலம். இவருடைய சமூகம் மீதான அக்கறையும் மனித நேயமும் அவரின் படங்களிலும் வெளிப்பட்டன. அம்மா குமாரி ருக்மிணி இங்கே மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்தார். ஆக, கலை, இலக்கிய, சமூக நலன் சார்ந்த குணங்களுடனே வெங்கட மகாலட்சுமி வளர்ந்தார். படிப்பில் அதீத கவனமும் கொண்டவராகத் திகழ்ந்தார். அதேசமயம், எதையும் உள்வாங்கி கிரகிக்கும் திறனும் வளர்ந்திருந்தது. ‘சவாலே சமாளி’ படத்தை எடுத்த மிகச்சிறந்த இயக்குநரான மல்லியம் ராஜகோபால், ‘ஜீவனாம்சம்’ படத்தில் வெங்கட மகாலட்சுமியை, லட்சுமியாக நாயகியாக்கியது 1968-ம் ஆண்டு.

முதல் படத்திலேயே முக்கியமான கதாபாத்திரம். எவரின் சாயலும் இல்லாமல் நின்றார். நடந்தார். வசன உச்சரிப்பும் தனித்துவத்துடன் இருந்தது. படம் பார்த்துவிட்டு பத்திரிகைகளும் இவரை சிறப்புற விமர்சித்தன. ரசிகர்களும் லட்சுமியின் அழகையும் அதைவிட அவரின் நடிப்பையும் ரொம்பவே ரசித்தார்கள்.

முன்னதாக ஏற்கெனவே குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். ‘ஜீவனாம்சம்’ வந்த சமயத்திலேயே, அதே வருடத்தில் மூன்று நான்கு படங்கள் வந்தன. ‘கன்னிப்பெண்’ படத்திலும் ‘அன்னையும் பிதாவும்’ படத்திலும் லட்சுமியின் கதாபாத்திரமும் நடிப்பும் பாராட்டுகளை அள்ளின. அதே வருடத்தில், தெலுங்கிலும் வாய்ப்புகள் வந்தன. அங்கேயும் இதேபோல், எடுத்ததுமே எல்லோருக்கும் பிடித்த நடிகையானார் லட்சுமி.

1969-ம் ஆண்டு, லட்சுமியின் திரை வாழ்வில் சிறப்பான ஏற்றமும் மாற்றமும் மிக்க ஆண்டாக அமைந்தது. எம்ஜிஆரின் ‘மாட்டுக்கார வேலன்’ படத்திலும் நடித்தார். கே.பாலசந்தரின் இயக்கத்தில் சிவாஜியுடன் ‘எதிரொலி’ படத்திலும் நடித்தார். மேலும் பல படங்களிலும் நடித்தார்.

தமிழில் ஜெயித்துக் கொண்டிருக்கும் போதே, தெலுங்கிலும் அறிமுகமாகி ஜெயித்துக் கொண்டே இருந்தார் லட்சுமி. அங்கொரு பக்கம் படங்கள் குவிந்தன. இங்கேயும் படங்கள் குவிந்தன. 1970-ல், தமிழில் மட்டுமே எட்டுப் படங்களில் நடித்தார் லட்சுமி. அஷ்ட லட்சுமியாக, எட்டுவித கதாபாத்திரங்களிலும் ஜொலித்தார்.

‘நவக்கிரகம்’, ‘நூற்றுக்கு நூறு’, ‘திருமகள்’, ‘தங்கைக்காக’ என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிகை லட்சுமியின் பண்பட்ட நடிப்பை நமக்கு பறைசாற்றியபடியே இருந்தன.

எழுபதுகளின் தொடக்கம்... இன்னும் பிரகாசமாக அமைந்தது லட்சுமி. அந்த வருடத்தில் தமிழில் மட்டுமே பத்துப் படங்களில் நடித்தார். இந்த வருடத்தில்தான் ‘காசேதான் கடவுளடா’ ரமாவாக காமெடியும் கொஞ்சம் பரிதாபமும் கொண்டு நம்மைக் கலக்கியெடுத்தார். எம்ஜிஆருடன் ‘குமரிக்கோட்டம்’ படத்தில் நடித்தார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் முதல் இயக்கமான ‘கனிமுத்து பாப்பா’வில் நடித்தார். ‘கருந்தேள் கண்ணாயிரம்’, ‘புகுந்த வீடு’, ‘அருணோதயம்’, ‘திக்குத்தெரியாத காட்டில்’, ‘ஆசீர்வாதம்’ என ஒவ்வொரு கேரக்டரிலும் தன் அசாத்திய நடிப்பால் நம்மை அசத்தினார்.

ஒரு படத்தில் நம்மைக் கலங்கடிப்பார். அடுத்த படத்தில் காமெடியில் குலுங்க வைப்பார். இன்னொரு படத்தில் தன் அழகால் மயங்கச் செய்திருப்பார். இன்னொரு படத்தில் தன் வசன உச்சரிப்புகளாலேயே வியக்கவைத்திருப்பார்.

1972 மற்றும் 1973-ம் ஆண்டுகளில் ஏகப்பட்ட படங்கள். எம்ஜிஆருடன் ‘சங்கே முழங்கு’, ‘இதயவீணை’ பண்ணினார். ’ராஜராஜ சோழன்’ படத்தின் குந்தவையாக வெளுத்து வாங்கினார். ’தேடி வந்த லட்சுமி’யில் அமர்க்களமான நடிப்பைக் கொடுத்தார். கே.பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்த ‘நான் அவனில்லை’ படத்தில் சலீமா எனும் கேரக்டருக்கு உயிர் கொடுத்து அசத்தினார். இன்னும் நிறைய படங்கள் வந்தன. நடிகை லட்சுமிக்கு ரசிகர் கூட்டம் உருவானது.

மூதறிஞர் ராஜாஜியின் கதையை இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் ‘திக்கற்ற பார்வதி’ யாக எடுக்க, அதில் பார்வதியாகவே வாழ்ந்து கலங்கடித்தார் லட்சுமி. பாராட்டுகள் குவிந்தன. படத்தின் விமர்சனத்தில், இரண்டு பாராக்களை நடிகை லட்சுமியின் நடிப்பும் அவரின் கண்களே பேசிவிடுகிற வசனங்களுமே ஆக்கிரமித்தன. நடிகை லட்சுமி, சாதாரண லட்சுமி அல்ல... தனித்துவமும் மகத்துவமும் மிக்க நடிகை எனத் திரையுலகமும் ரசிகர்களும் உணர்ந்த தருணம் அப்போதுதான் நிகழ்ந்தது!

1974-ம் ஆண்டு கேரளமும் நடிகை லட்சுமியை ‘வருக வருக’ என சிகப்புக்கம்பளமிட்டு வரவேற்றது. ‘சட்டக்காரி’ எனும் படத்தில் நடித்தார். ’திக்கற்ற பார்வதி’யில் பார்வதியாகவே வாழ்ந்தவர், இங்கே ‘ஜூலி’யாகவே உருமாறியிருந்தார். அதற்கு ஃபிலிம்பேர் விருது கிடைத்தது. ‘ஜூலி’க்கு கேரள அரசின் சிறந்த நடிகை விருது முதல் படத்திலேயே கிடைத்தது. பின்னர், இந்தியில் படமாக்கப்பட்ட போதும் லட்சுமியே நடித்து அங்கேயும் புகழ்பெற்றார். கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பது போல், நடிப்பின் நுணுக்கம் அறிந்தோருக்கும் செல்லும் மொழியெங்கும் சிறப்பு என்பதற்கு அன்றைக்கு உதாரணமாகத் திகழ்ந்தார் லட்சுமி!

1975-ம் ஆண்டு, தமிழ் சினிமா காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும் ஆண்டு. தமிழின் மிகச்சிறந்த படைப்பாளியான எழுத்தாளர் ஜெயகாந்தன், தன் ‘அக்னிப்பிரவேசம்’ சிறுகதையின் மூலம் ‘கங்கு’ பற்றவைத்து, தூக்கிப்போட்டிருந்தார். அதன் விரிவான வடிவமாக ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வந்து தாக்கத்தை ஏற்படுத்தியது. கதையைப் படித்துவிட்டு, கங்காவுக்காக கண்ணீர் விட்டு அழுதார்கள் ரசிகர்கள். அதை படமாக்க முனைந்தபோது கங்கா கதாபாத்திரத்துக்கு லட்சுமிதான் உயிர் கொடுப்பார் என முடிவு செய்திருந்தார்.

ஒருவேளை, “தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பிஸியாக இருந்த வேளையில், லட்சுமியால் நடிக்க முடியாமல் போயிருந்தால், நான் இந்தப் படத்தை எடுத்திருக்கவே மாட்டேன். என் கற்பனையில் இருந்த கங்காவை திரையில் உலவச் செய்ய லட்சுமியைத் தவிர வேறு யாராலும் முடியாது’’ என ஜெயகாந்தன் அப்போது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். தேசிய விருது தேடி வந்து, லட்சுமியின் கரங்களில் விழுந்தது.

’சீர்வரிசை’ படத்தில் ஒரு லட்சுமி. ‘வாழ்வு என் பக்கம்’ படத்தில் இன்னொரு விதமான லட்சுமிகள். சரஸ்வதியாகவும் உஷாவாகவும் இவரின் நடிப்பை எழுபதுகளின் ரசிகர்கள் இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் ஜெயகாந்தன். இந்த முறை ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படமாக உயிர் பெற்றது. நடிகை லட்சுமியையே மறந்துபோய், கதாபாத்திரத்துக்குள் நாம் சிக்கிக்கொண்டு, கதறிவிடுவோம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது, எனக்கு அரைநிஜார் வயது. ’’லட்சுமி மாதிரி நடிக்கறதுக்கு இனிமே ஒருத்தி பொறந்துதான் வரணும்’’ என்று என் அம்மா சொன்னார். அப்போது அர்த்தம் புரியவில்லை. பின்னர், பழைய படங்களையும் அவரின் அப்போது வந்த படங்களையும் பார்க்கப் பார்க்க, நடிப்பின் மகா ராட்சஷி லட்சுமி என்பதைப் புரிந்து உணர்ந்த தருணங்கள் பல படங்களில் நடந்திருக்கின்றன.

’அச்சாரம்’, ‘நங்கூரம்’ பார்த்துவிட்டு பிரமித்துக் கொண்டிருந்தபோதுதான், சிவாஜியுடன் லட்சுமி நடித்த ‘தியாகம்’ வந்தது. சேர்ந்து நடிப்பது ஒருவகை சுலபம், தனித்து கேமராவுடன் பயணித்தபடி நடிக்க ஆழ்ந்த திறமையும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் நடிப்பில் ஜொலிப்பும் வேண்டும். ‘வசந்தகால கோலங்கள்’ பாடலில் லட்சுமியின் நடிப்புக்காகவே ஆறேழு முறை பார்த்தேன். முகத்தில் இறுக்கம், இறுக்கத்துக்குள்ளே சோகம், சோகத்துக்குள்ளே நம்பிக்கை போனதன் வலி, நடையில் ஒரு கழிவிரக்கம், பார்வைக்குள் படர்ந்திருக்கும் துக்கம்... அம்மா சொன்னதெல்லாம் புரியத்தொடங்கியது என் பத்தாவது வயதில்!

முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினியுடன் நடித்த ‘பொல்லாதவன்’ படத்தை மறக்கவே முடியாது. லட்சுமியைத் தவிர வேறு யாரும் இத்தனை நேர்த்தியாக அந்தக் கதாபாத்திரத்தின் ஜீவனை உள்வாங்கி பண்ணிவிடவே முடியாது. முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி சாரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, ‘பொல்லாதவன்’ லட்சுமி கதாபாத்திரத்தையும் அவரின் நடிப்பையும் சொல்லி முக்தா சீனிவாசன் சிலாகித்துக் கொண்டாடியதைப் பகிர்ந்தார். சிவசங்கரியின் ’ஒரு சிங்கம் முயலாகிறது’ நாவல், ‘அவன் அவள் அது’விலும் லட்சுமி ராஜாங்கம் பண்ணியிருப்பார். நாவல்களைப் படமாக்கவேண்டும் என்றால் அந்த ஜீவன் கெடாமல் கொடுக்கவேண்டும் என்பதற்கு லட்சுமிதான் என்று உறுதிபட இருந்தது திரையுலகம்.

கவிதாலயாவின் தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமனின் இயக்கதில் விசுவின் வசனத்தில் ‘நெற்றிக்கண்’ணில் ஸ்டைலிலும் குறும்பிலும் ரஜினி ஒருபக்கம் அசத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம், அடக்கமும் ஒடுக்கமுமாக, இயலாமையால் புழுங்கித் தவிக்கும் ரஜினியின் மனைவியாக உருக்கிவிடுவார் லட்சுமி. மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய ‘இன்று நீ நாளை நான்’ படமும் நாவல்தான். இதில் லட்சுமியின் நடிப்பும் நாவல்டிதான்! இளையராஜாவின் இசைக்காகவும் லட்சுமியின் நடிப்புக்காகவும் திரும்பத்திரும்பப் பார்த்தேன்.

பாகீரதியை நினைவிருக்கிறதா? அவளை எப்படி மறக்கமுடியும்? அனுராதா ரமணனைப் படித்தவர்களுக்கு அவளை நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படித் தெரியாத பலரும் பாகீரதியாக புதுமையும் புரட்சியும் பண்ணிய லட்சுமியின் நடிப்பைப் பார்த்துவிட்டு, புத்தகத்தைத் தேடித்தேடி வாங்கினார்கள். படித்தார்கள். ஆர்.சி.சக்தி எனும் மகத்தான இயக்குநர் இயக்கிய ‘சிறை’ படத்தையும் பாகீரதியாகவே வாழ்ந்து பெண்மைக்கும் பெண்களுக்கும் புது இலக்கணம் கொடுத்த லட்சுமியையும் கண்டு மிரண்டு போனேன்.

‘உண்மைகள்’ மாதிரியான படத்தில் நடிப்பார். ‘ஒரு மலரின் பயணம்’ படத்தில் நடிப்பார். ‘உதயகீதம்’ படத்தில் போலீஸ் அதிகாரி ஒரு ஸ்டைல். பாக்யராஜுடன் நடித்த ‘ருத்ரா’ படத்தில் அதே போலீஸ் அதிகாரிக்கு மற்றொரு மிடுக்கு.

நான் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த போது காரைக்குடி பாண்டியன் தியேட்டரில் ‘சம்சாரம் அது மின்சாரம்’ பார்த்தேன். பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருந்தேன். லட்சுமி ரகுவரனிடம் பேசுவது, கமலாகாமேஷிடம் பேசுவது, கிஷ்முவிடம் பேசுவது, சந்திரசேகரிடம் பேசுவது, மனோரமாவிடம் பேசுவது, கடைசியில் விசுவிடம் பேசுவது எல்லாமே மனப்பாடம் எனக்கு. இன்றைக்கு வரை எத்தனை முறை பார்த்தேன் என்கிற கணக்குகளே இல்லை. பள்ளித் தோழர்களிடமும் என் சித்தியரிடமும் தாத்தாவிடமும் லட்சுமியைப் போல் நின்று கொண்டு வசனங்களைப் பேசிக்காட்டியதெல்லாம் லட்சுமி, மகா நடிகையைப் பற்றி எழுதும்போது நினைவுக்கு வருகிறது.

நடிகை லட்சுமியின் தெலுங்குப் பக்கமும் இந்திப் பக்கமும் கன்னடப் பக்கமும் நாம் செல்லவே இல்லை. ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு அத்தியாயங்களை எழுதினால்தான் நம் மனம் பூரிக்கும். அவரைப் பற்றி அவ்வளவு இருக்கிறது.

எழுத்தாளர் பாலகுமாரன் சாரிடம் உதவியாளனாகப் பணியாற்றிய சமயம். ஷங்கரின் ‘ஜீன்ஸ்’ படம் பற்றிய பேச்சுகள் ஓடிக்கொண்டிருந்தன. அவர்தான் வசனம். எல்லாமே அங்கே ராணுவப் பாதுகாப்புதான். ரகசியம் கசியாது. ஆனால் ஒருநாள்... ‘’ஐஸ்வர்யா ராய்க்கு பாட்டியாக வருபவர் ரொம்பவே ஸ்பெஷலான நடிகையாக இருக்கவேண்டும். கதையை எல்லாப் பக்கங்களிலும் இழுத்துக்கொண்டும் அரவணைத்துக்கொண்டும் செல்லும் சுமைதாங்கி மாதிரி அவர். அந்தப் பாட்டியாக லூட்டி அடிக்கப் போகிறவர் யார் சார்?’’ என்று பாலகுமாரன் சாரிடம் கேட்டேன். ‘’நீ சொல்லு, யாரைப் போட்டா நல்லாருக்கும்னு நினைக்கிறே’’ என்று என்னைக் கேட்டார் பாலகுமாரன் சார். ‘’நடிகை லட்சுமிதான் சார்’’ என்றேன். சட்டென என்னை உற்றுப் பார்த்தார். அருகில் வரச்சொல்லி, என் தலை தொட்டு ஆசீர்வதித்து, ‘’ஆமாம்டா... லட்சுமிதான். யார்கிட்டேயும் சொல்லிக்கிட்டிருக்காதே’’ என்றார்.

எஸ்பிபி-யும் லட்சுமியும் நடித்த தொலைக்காட்சித் தொடர் ஒரு கவிதை மாதிரி இருக்கும். இருவரும் தோழனும் தோழியுமாக, அந்த வயதில் ஒருமித்த உணர்வுடன் வாழ்ந்து நம்மை ஏங்கவைத்திருப்பார்கள்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு, நடிகை லட்சுமியிடம் ஒரு பேட்டி. அவர் ஆரோக்கியம் பேணுவது குறித்த பேட்டி அது. மிக எளிமையாக, அழகாக, ஒவ்வொன்றையும் செய்து காட்டி அன்புடன் பேசினார். அன்பு மனுஷி அவர்!

1952-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி பிறந்த லட்சுமிக்கு அந்தந்த மாநில விருதுகள், தேசிய விருதுகள் என நிறையவே கிடைத்திருக்கின்றன. ஆனால், இவையெல்லாமே அள்ளிக்கொடுக்கப்பட்ட விருதுகளோ அங்கீகாரமோ அல்ல. கொஞ்சம் கிள்ளிக் கிள்ளிக் கொடுக்கப்பட்டவையே!

Ramji

70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் லட்சுமி எனும் மகாநடிகை. அற்புத மனுஷி.

எப்பேர்ப்பட்ட உன்னதமான, உயிர்ப்பான நடிகை. அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேர்ந்த சிற்பியைப் போல் செதுக்கிய நடிகை. தொலைக்காட்சிகளில் தமிழிலும் தெலுங்கிலும் கன்னடத்திலும் தன் அறிவையும் அன்பையும் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தியும் ‘மழலைப்பட்டாளம்’ மாதிரியான படங்களை இயக்கியும் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பன்முக நாயகி.

அன்றைக்கு... பேட்டியெல்லாம் முடிந்து வெளியே வரும்போது மனம் அவரைப் பற்றி தடதடவென யோசித்துக்கொண்டே வந்தது. நடிகை லட்சுமிக்கு உரிய கதாபாத்திரங்களை ஒருகட்டத்தில் தமிழ்த் திரையுலகம் கொடுக்காமல் விட்டது ஏன் என்கிற கேள்வி அப்போதிருந்தே எனக்குள் இருக்கிறது.

போன வருடம் கூட, அவர் தெலுங்கில் நடித்த ‘ஓ பேபி’ மிகப்பெரிய அளவில் கலக்கியெடுத்தது. லட்சுமியின் நடிப்பில் இன்றைய தலைமுறையினரே மிரண்டு போய் பார்த்துப் பிரமித்தார்கள். தமிழக அரசு, தமிழ்த் திரையுலகம் என லட்சுமியை இன்னும் கொண்டாடியிருக்கவேண்டுமோ என்று தோன்றுகிறது.

70 வயதிலும் அதே ஆரோக்கியதுடன் மனதை தக்கையாகத்தான் வைத்துக் கொண்டு வலம் வருகிறார் லட்சுமி. அவரிடம் இன்னும் இன்னுமாக இருக்கிற திறமைகளை, நாம் சினிமா சீசாவுக்குள் நிரப்பி, விநியோகிப்போம். கலைக்கு மரியாதையையும் கலைஞனுக்கு மரியாதையையும் தந்து, அவரை வாழ்த்துவோம்! புதிது புதிதாகப் புறப்பட்டிருக்கும் 2கே இயக்குநர்கள், லட்சுமி எனும் நடிப்பு ராட்சஷியை உணர்ந்து, தெரிந்து, புரிந்து, அவரைப் பயன்படுத்தினால், இன்னும் பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பார் லட்சுமி. இன்னும்கூட அவருக்கு விருதுகள் குவியலாம்!

நடிகை லட்சுமி அம்மாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in