`அது வெட்கக்கேடான ரகசியம்’: குடும்ப நண்பரின் பாலியல் தொல்லை பற்றி புத்தகம் எழுதிய நடிகை!

`அது வெட்கக்கேடான ரகசியம்’: குடும்ப நண்பரின் பாலியல் தொல்லை பற்றி புத்தகம் எழுதிய நடிகை!

பிரபல இந்தி நடிகை குப்ரா சேட் (Kubbra Sait). பெங்களூருவைச் சேர்ந்த இவர், சல்மான்கானின் ரெடி, மாதவன் நடித்த, ஜோடி பிரேக்கர்ஸ், சல்மானின் சுல்தான், ரன்வீர் சிங்கின் கல்லி பாய் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியான ‘ஸ்கேர்ட் கேம்ஸ்’ உட்பட பல வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.

இவர், தனக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஓபன் புக்: நாட் எ மெமைர் (Open Book: Not quite a Memoir) என்ற இந்தப் புத்தகத்தில், தனது 17 வயதில், குடும்ப நண்பர் ஒருவரால் பாலியல் கொடுமைக்கு ஆளானதை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவரை எக்ஸ் என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

பெங்களூருவில் உள்ள ஓர் உணவகத்துக்கு அடிக்கடி செல்வோம். எனக்கும் என் சகோதரர் டேனிஷுக்கும் அதன் உரிமையாளர் நெருக்கமாக இருந்தார். அம்மாவின் பொருளாதாரச் சிக்கல்களுக்கு அவர் உதவினார். பிறகு என்னிடம் பாலியல் தொல்லையைத் தொடங்கினார். ஒரு முறை, சிக்கலில் இருந்த போது அவர் கொடுத்த பணத்தை பெற்றதும் அம்மா மகிழ்ச்சியடைந்தார். நானும் பெருமூச்சு விட்டேன். அப்போது காரின் பின் இருக்கையில் இருந்த என் கால்களை அவர் கை தடவுவதைக் கண்டேன். மாமாவாக இருந்த அந்த எக்ஸ், என்னைப் பார்த்துச் சிரித்தார். நான் உணர்ச்சியற்றவளாக இருந்தேன்.

பிறகு அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார். தன்னை மாமா என்று அழைக்கக் கூடாது என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். எல்லோர் முன்பும் என் கன்னத்தில் முத்தமிட்டு ’எனக்குப் பிடித்தவள்’ என்று சொல்வார். அம்மா சிரிப்பாள். எனக்கு எரிச்சலாக இருந்தாலும் அமைதி காப்பேன்.

இரண்டரை வருடங்கள் இந்தத் தொல்லையை அனுபவித்தேன். துபாய்க்கு படிக்கச் சென்றபின் அவரிடம் இருந்து தப்பித்தேன். பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் இதைப் பற்றி சொன்னபோது அம்மா இதற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முதன் முதலில், தான் அவரால் எப்படி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானேன் என்பதையும் குப்ரா அந்தப் புத்தகத்தில் விவரித்துள்ளார்.

’ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்ற அவர், அருவருப்பான செயலில் ஈடுபட்டதும் நான் கத்தியிருக்க வேண்டும். உதவிக்காக ஓடியிருக்க வேண்டும். ஆனால் செயலற்றவளாக இருந்தேன். என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அது என் வெட்கக் கேடான ரகசியம்’’ என்று தெரிவித்துள்ளார். நடிகை குப்ரா சேட்டின் இந்தப் புத்தகம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in