
சமீப காலமாக பரபரப்பாக பேசப்படும் இமான் - மோனிகா விஷயம் குறித்து குட்டி பத்மினி மனம் திறந்து உள்ளார்.
இசையமைப்பாளர் இமான் தன்னுடைய முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய குழந்தைகளைப் பிரிந்து வாழ்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகவும், அதை மன்னிக்க மாட்டேன் எனவும் இனிமேல் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை எனவும் கூறியிருந்தார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
சிவகார்த்திகேயன் குறித்து நெகடிவ்வான பிம்பமும் இணையத்தில் பரப்பப்பட்டது. இந்த நிலையில் மோனிகாவும் இது குறித்து பேசியிருந்தார். சிவகார்த்திகேயன் தங்களுடைய குடும்ப நண்பர் எனவும் தனக்கும் இமானுக்கும் விவாகரத்து ஆகக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் சிவகார்த்திகேயன் எடுத்த முயற்சியை தான் இமான் அப்படி தவறாக சித்தரித்துள்ளார் எனவும் கூறியிருந்தார். இந்த விஷயம் குறித்து தற்பொழுது இமானுக்கும் மோனிகாவுக்கும் குடும்ப நண்பராக இருக்கும் நடிகை குட்டி பத்மினி தன்னுடைய யூடியூப் சேனலில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது, 'இமான் வீட்டிற்கும் எங்களுக்கும் நிறைய நெருக்கம் இருக்கிறது. மோனிகா பேட்டி ஒன்றில் ஜீவனாம்சம் கொடுக்கவில்லை என்று சொல்வதெல்லாம் பொய். மோனிகாவிற்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்சத்தை இமான் கொடுத்து கொண்டிருக்கிறார்.
இப்போது வரைக்கும் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு செலவையும் இமான் தான் பார்த்துக் கொள்கிறார்.
இப்போது இரண்டாவதாக திருமணம் செய்திருக்கும் அமலி என்ற பெண்ணை நாங்கள் தான் இமானுக்கு அறிமுகம் செய்து வைத்தோம். விவாகரத்துக்கு பிறகு அமலியை கல்யாணம் செய்ய, அவரை புரிந்து கொள்வதற்காக தான் ஒரு வருடம் அமலியோடு இமான் பழகி வந்தார். ஆனால், இவர்கள் இருவரும் பழகி வந்தது கூட விவாகரத்திற்கு பிறகு தான் என்று கூறியிருந்தார். மோனிகா இதுபோலத் தவறாக இமானை சித்தரிப்பது இப்போது வேண்டாத வேலை' எனக் கூறியுள்ளார்.