
கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்தும், உடல் எடையை குறைத்தது குறித்தும் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் மனம் திறந்திருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் நேரடியாக அமேசான் இணையதளத்தில் வெளியானது. இதற்காக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அப்படி தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ், எப்போதும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்வதாக ஒரு பேச்சு உள்ளது. இது குறித்தான உண்மை என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை கீர்த்தி சுரேஷ், ``நான் அதுபோல எந்த ஒரு பேட்டியிலும் எதையும் சொல்லவில்லை. முதலில் கவர்ச்சி என்பது அழகு. நாம் தான் அது குறித்து தவறான ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனாலும் எனக்கு அதிக அளவில் Skin show இருக்கும்படியான கதாபாத்திரங்களில் நடிக்கவும் விருப்பமில்லை' என்று கூறினார்.
உடல் எடையை குறைப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் பேசியபோது, "உடல் எடை குறைத்த பின்பு இப்போது நான் எந்த மாதிரியான தோற்றத்தில் இருக்கிறேனோ அது எனக்கு பிடித்து இருக்கிறது. இப்பொழுது எனக்கு பிடித்தமான அனைத்து உடைகளையும் நான் அணிகிறேன். இதற்கு முன்பு அப்படி இருந்ததில்லை.
ஆனால் நான் முன்பு உடல் எடை அதிகம் இருந்த தோற்றத்தில் பார்க்க தான் நிறைய ரசிகர்கள் விரும்புகிறார்கள். அது அவர்களுடைய விருப்பம். தோற்றத்தை விடவும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். மேலும் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதும் எனக்கு பிடித்திருக்கிறது. ஒரே நேரத்தில் ஒரு கதாபாத்திரத்தில் மட்டுமில்லாமல் அடுத்தடுத்து வேறுவேறு கதாபாத்திரங்களுக்கு மாறுவது என்பது தான் இதற்கு காரணம்' என்று கூறினார்.