காஞ்சனா: உச்சம் தொட்ட ஒற்றை நட்சத்திரம்!

நடிகை காஞ்சனா
நடிகை காஞ்சனா

கலைஞர்கள் நம்மையெல்லாம் சந்தோஷப்படுத்துபவர்கள். கொண்டாட்ட மனநிலையில் ஆழ்த்துபவர்கள். ஆனால், அவர்களின் துக்கங்களையெல்லாம் ஏனோ நாம் உணருவதே இல்லை. ‘அவர் ஒரு நடிகர். நன்றாக நடிக்கிறாரா இல்லையா. நமக்கு அவரைப் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா' என்று மட்டுமே பார்த்துக் கடந்துவிடுகிறோம். நடிகை காஞ்சனாவின் வாழ்வை அப்படியெல்லாம் ஒதுக்கிவைத்துவிட முடியாது.

பெங்களூருவைச் சேர்ந்தவர். ஏழெட்டு மொழிகள் அறிந்தவர். படிப்பாளி. ஆனாலும் அப்பாவுக்குத் தொழிலில் நஷ்டம். ஏகப்பட்ட கடன். அவற்றிலிருந்தெல்லாம் மீள வேண்டும் என்றால் வேலைக்குச் செல்ல வேண்டும் எனும் நிலை. அப்படித்தான் ‘ஏர் ஹோஸ்டஸ்’ பணியில் சேர்ந்தார். வேறு வேலையும் கிடைக்குமா எனத் தேடிக்கொண்டிருந்தார்.

‘கல்யாண பரிசு’, ‘சுமைதாங்கி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ என்று காதலையும் வாழ்வையும் சோகம் பிழியப் பிழியச் சொன்ன ஸ்ரீதரும் சித்ராலயா கோபுவும் ஒருமுறை மெரினா பீச்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ‘நாம ஏன் இவ்ளோ சோகமாவே படம் பண்றோம். ஜாலியா, கலகலன்னு படம் எடுத்தா என்ன?’ என்று பகிர்ந்துகொண்டார்கள். விளைவு... முழுக்க முழுக்க கலகலப்புடன் காமெடிப் படம் எடுப்பது எனத் தீர்மானித்தார்கள். படமும் எடுத்தார்கள். அந்தப் படம் மூன்று தலைமுறைகளைக் கடந்தும், இன்றைக்கும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. படத்தின் ஏதேனும் ஒரு காட்சியையேனும் நினைத்து நினைத்து, நம்மை சிரிக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் ‘காதலிக்க நேரமில்லை’.

காதலிக்க நேரமில்லை
காதலிக்க நேரமில்லை

ஜெமினி கணேசன், தேவிகா, கல்யாண்குமார் என்றெல்லாம் பெரிய நடிகர் / நடிகைகளை வைத்துப் படம் பண்ணாமல், இந்த முறை புதுமுகங்களையும் போடலாம் என்று நினைத்தார் ஸ்ரீதர். பூமிக்கும் இல்லாமல், வானுக்கும் இல்லாமல் நடுவிலே விமானத்தில் காஞ்சனாவைப் பார்த்தார். பார்த்தவுடனேயே ‘இவர்தான் அந்த நாயகி’ எனத் தீர்மானித்தார். காஞ்சனாவின் குடும்பச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, அங்கே ஆரம்பப் புள்ளி அமைந்தது.

‘காதலிக்க நேரமில்லை’ படம் தொடங்கியதும் வருகிற முதல் முகங்கள்... முத்துராமன், காஞ்சனாதான்! இளமையிலும் அழகிலும் நடிப்பிலும் பார்வையிலும் ஒரு காமெடிப் படம்தானே... என்பவற்றையெல்லாம் தாண்டி மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பார் காஞ்சனா. அதிலும் முதல் படத்திலேயே!

ஒருபக்கம் பாலையா... இன்னொரு பக்கம் நாகேஷ். இவர்களுக்கு நடுவே, கிழவ வேஷத்தில் இருக்கும் முத்துராமனைத் தெரியாமல், அவரின் குறும்பை வெறுப்பதும், வந்திருப்பவர் முத்துராமனின் அப்பா என்று தெரியாமலேயே, அந்தத் திருமணத்துக்குச் சம்மதமில்லை என்று மறுப்பதும் என நடிப்பில் தடம் பதித்தார் காஞ்சனா.

’கடன் சுமை அதிகமாச்சே...’ என்று வருகிற சினிமா வாய்ப்புகளையெல்லாம் ஏற்கும் மனநிலை காஞ்சனாவிடம் இல்லை. நல்ல கதையைத் தேர்வு செய்தார். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்தார். அறுபதுகளின் மத்தியில் தொடங்கிய காஞ்சனாவின் திரைப் பயணத்தில், ஒவ்வொரு படமும் பேசப்பட்டது!

தெலுங்கிலும் கன்னடத்திலும் வாய்ப்புகள் குவிந்தன. மீண்டும் சித்ராலயாவின் ‘உத்தரவின்றி உள்ளே வா’ காமெடிப் படத்தில் காஞ்சனா தான் நாயகி. கலகலவெனச் செல்லும் படத்தில், காஞ்சனாவும் அவரின் கதாபாத்திரமும் தனித்துத் தெரிந்தன. ‘மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி’ என்கிற டூயட் பாடலுக்காகவே திரும்பத் திரும்பப் பார்த்தது ரசிகக் கூட்டம். அதிலும் எஸ்பிபி-யின் மந்திரக் குரலும் காஞ்சனாவின் பேரழகும் நம்மைக் கட்டிப்போட்டன.

ஒருபக்கம் நண்பர்கள் கூட்டத்துக்குள் காஞ்சனாவின் வருகை, இன்னொரு பக்கம் குழந்தையின் வருகை... மற்றொரு பக்கம் மனநிலை பாதிக்கப்பட்ட ரமாபிரபா என அந்தப் படமே அதகளமாக இருக்கும். நட்சத்திரக் கூட்டத்துக்கு நடுவில் நடிப்பில் தனித்துத் தெரிந்தார் காஞ்சனா.

தமிழ்ப் படத்தில்தான் அறிமுகம் என்றாலும் இந்தியிலும் வரிசையாகப் படங்கள் கிடைத்தன. கன்னடத்தில் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன. கடன் மொத்தத்தையும் அடைத்தார் காஞ்சனா. ஆனால், தன் கவலைகளையும் கஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் வலிகளையும் ஒருபோதும் தன் சினிமா வாழ்க்கைக்குள் கொண்டுவரவில்லை. உடன் நடிக்கும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவே இல்லை.

சிவாஜியுடன் ‘சிவந்த மண்’ படத்தில் நடித்தார். படத்தில் மகாராணியாகவும் போராளியாகவும் என இரண்டு வேறுபட்ட குணங்களையும் மிகச்சிறப்பாக தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருந்தார். எல்லாப் பாடல்களிலும் கவனம் ஈர்த்தார். என்றாலும் ‘பட்டத்துராணி பார்க்கும் பார்வை’ பாடலும் காஞ்சனாவின் நடனமும் படத்தில் மிக முக்கியமான அம்சங்களாக மிளிர்ந்தன. இன்றைக்கும் டிவியில் இந்தப் பாடல் ஒளிபரப்பாகும்போது, ரிமோட்டைத் தொடாமல் வியந்து மலைத்து ரசிப்பவர்கள் ஏராளம்.

ஸ்ரீதரின் ‘அவளுக்கென்று ஒரு மனம்’ படத்தில் மிகச்சிறந்த கேரக்டரை வழங்கியிருந்தார் ஸ்ரீதர். அப்படத்தின் ‘ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதிலும் எஸ்பிபி விளையாடியிருப்பார். ‘மங்கையரில் மகாராணி, மாங்கனி போல் பொன்மேனி’யும் எஸ்பிபி தான். காஞ்சனாவின் நளினமான நடிப்பு இப்படத்திலும் பேசப்பட்டது!

’சிவந்த மண்’
’சிவந்த மண்’

எம்ஜிஆருடன் ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகக் கனமானது. கே.ஆர்.விஜயாதான் நாயகி என்றாலும் இவரின் நடிப்பு பிரமிக்க வைக்கும். பாலசந்தரின் ‘பாமா விஜயம்’ படத்தில், செளகார் ஜானகி, ஜெயந்தியுடன் காஞ்சனாவும் பாலையாவின் மருமகளாக நடித்திருப்பார். மூக்குக்கண்ணாடி போட்டால்தான் தெரியும் என்கிற காமெடியாகட்டும் மொட்டைக் கடுதாசிக்கு ஒவ்வொருவரும் பயந்து, தன் கணவனோ... என்று சந்தேகப்படுவதாகட்டும்... ’ஆனி முத்து வாங்கிவந்தேன் ஆவணி வீதியிலே அள்ளிவைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே’ என்ற பாடலில் செளகார் ஜானகி, ஜெயந்தி, காஞ்சனா என மூவரும் கலக்கியெடுத்திருப்பார்கள். முத்துராமனுக்கு ஜோடியாக அசத்தியிருப்பார் காஞ்சனா.

‘சாந்தி நிலையம்’ காஞ்சனாவுக்கு முக்கியமான படம். 'கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்’, ‘இயற்கையெனும் இளைய கன்னி’ என்ற இனிமையான பாடல்களெல்லாம் கிடைத்தன. இதிலும் தன் தனித்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து நல்ல படங்கள்... நல்ல கேரக்டர்கள்.

ஆனால் திருமணம் மட்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ‘ஒரு நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கோயேம்மா’ என்று சக நடிகர்களும் நடிகைகளும் அறிவுரை சொல்லியும் ஏற்க முடியாமல் தவித்தார். குருவி சேர்ப்பது போல் சேகரித்த சொத்துகளும் உறவுகளிடம் மாட்டிக்கொண்டன. ‘இப்போ என்ன அவசரம், இன்னும் நடிக்கட்டும்’ என்று பணத்தில் குறியாக இருந்தார்கள் உறவினர்கள். வீடுவாசல், சொத்துபத்து என்று சேர்த்துவைத்துப் பார்த்தால், கல்யாண வயதெல்லாம் தாண்டிப்போயிருந்தது. அதன் பின்னர், உறவினர்களிடம் மாட்டிக்கொண்ட சொத்துகளை மீட்பது பெரிய சவாலாக உருவெடுத்தது.

’சட்ட உதவியை நாடி, போராடித்தான் சொத்துகளை மீட்டேன். அதிலும் பாதி சொத்துகளே கிடைத்தன’ என்று சொல்லும் காஞ்சனா, சொத்துகளில் ஒரு பகுதியை திருப்பதி கோயிலுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்.

மிச்ச சொச்ச வாழ்க்கையை தன் சகோதரி வீட்டில் இருந்தபடி கழித்துக்கொண்டிருக்கும் காஞ்சனாவுக்கு வயது எண்பதுக்கும் மேலே. ஆன்மிகத்தில் நிம்மதியையும் அமைதியில் ஆனந்தத்தையும் தேடிக்கொண்டிருக்கும் காஞ்சனா எனும் பண்பட்ட நடிகையின் வாழ்க்கையில், சந்தோஷத்துக்கும் நிம்மதிக்கும்தான் நேரமில்லாமல் போய்விட்டது.

நடிகை காஞ்சனாவின் பிறந்தநாள் (ஆகஸ்ட் 16). அவரது திரையுலக சாதனைகளைப் போற்றுவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in