`என் பெயரை கெடுக்கிறார்; ஆதாரத்துடன் நிரூபியுங்கள்'- கவிஞர் சினேகனுக்கு நடிகை ஜெயலட்சுமி சவால்

`என் பெயரை கெடுக்கிறார்; ஆதாரத்துடன் நிரூபியுங்கள்'- கவிஞர் சினேகனுக்கு நடிகை ஜெயலட்சுமி சவால்

"அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதாக கூறும் கவிஞர் சினேகன் அதற்கான ஆதாரங்களை காண்பித்து நிரூபிக்க வேண்டும். தனது பெயரை கெடுக்கும் நோக்கில் சினேகன் புகார் அளித்துள்ளார்" என்று சின்னத்திரை நடிகையும், பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.

திரைப்பட பாடலாசிரியர் சினேகன் கடந்த 5-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், நடிகையும், பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி என்பவர் தான் நடத்தும் சிநேகம் என்ற அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பாக வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி கேள்வி கேட்பதாகவும், இதனால் தனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வரும் நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமி இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் பாடலாசிரியர் சினேகன் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் புகார் அளித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஜெயலட்சுமி, "கடந்த 2018-ம் ஆண்டு முதல் சினேகம் என்ற பெயரில் முறையான அங்கீகாரம் பெற்று அறக்கட்டளை நடத்தி வருகிறேன். தனது அறக்கட்டளைக்கென பிரத்யேக வங்கி கணக்கு, பான் கார்டு இருக்கும்போது, பாடலாசிரியர் சினேகன் அறக்கட்டளைக்கு செல்ல வேண்டிய நன்கொடை எவ்வாறு தனது அறக்கட்டளைக்கு வரும். அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதாக கூறும் சினேகன் அதற்கான ஆதாரங்களை காண்பித்து நிரூபிக்க வேண்டும். சினேகம் என்ற பெயரில் பலர் அறக்கட்டளை நடத்தி வருகின்றனர். தனது பெயரை கெடுக்கும் நோக்கில் சினேகன் புகார் அளித்துள்ளார்.

பாடலாசிரியர் சினேகன் அறக்கட்டளை பெயர் தொடர்பான பிரச்சினையை மட்டும் பேசாமல், தான் பண வசூலில் ஈடுபடுவதாகவும், தன் மீது அதிகப்படியான புகார்கள் இருப்பதாகவும் அவதூறு பரப்பும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது. சினேகன் திமுகவிற்கு விலை போயிட்டாரா? அல்லது என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு பேசுகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் தன் மீது பொய் புகார் அளித்து தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுவரும் சினேகன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் ஆணையர் அலுவலகம், தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன்.

குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் படத்தை திமுகவினர் தான் எடுத்து வருகின்றனர். திமுகவின் பி டீமாக நடிகர் கமலஹாசன் செயல்பட்டு வருகிறார்" என்று குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in