அழகால் திரையாண்ட அன்புள்ள மான்விழி!

பழம்பெரும் நடிகை ஜமுனாவின் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
நடிகை ஜமுனா
நடிகை ஜமுனா

படங்களின் எண்ணிக்கையைவிட, பாத்திரத்தின் தன்மையைப் புரிந்து உணர்ந்து சில படங்களில் மட்டுமே நடித்தாலும் நம் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிடுகிற கலைஞர்கள் பலர் உண்டு. தெலுங்கில் ஏராளமான படங்கள், பிற மொழிகளில் பல படங்கள், தமிழில் மட்டும் சில படங்கள் என்றிருந்தாலும் அந்தக் காலத்தில் அவரின் கண்களுக்காகவே பெரிதும் ரசிக்கப்பட்டார்; அவரின் தனித்துவ நடிப்பால் பாராட்டப்பட்டார். தன் நடிப்பால் தனியொரு இடத்தை தக்கவைத்துக் கொண்ட அந்த நடிகை... ஜமுனா!

கர்நாடக மாநிலம் பூர்விகம். அப்பாவுக்கு இசையார்வம். அம்மாவுக்கு நாட்டியத்தில் ஈடுபாடு. ஆனால் தன் மகளை டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் என்றுதான் பெற்றோர் விரும்பினார்கள். ஆனால் காலம் ஒரு டாக்டரின் மூலமாகவே அவரை கலையுலகிற்குள் கைப்பிடித்து அழைத்து வந்தது.

கர்நாடகத்தில் இருந்து ஆந்திராப் பக்கம் ஜாகையை மாற்றிக்கொண்டது ஜமுனாவின் குடும்பம். ஜமுனாவின் நிஜப்பெயர் ஜனா பாய். சிறுவயதில் படிப்பில் கெட்டியாகவும் கலைகளில் சுட்டியாகவும் வளர்ந்தார் ஜனா பாய். இவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த நடிகையர் திலகம் சாவித்திரி, ஜனா பாய்க்கு மிகவும் நெருக்கமானார். பேசுகிறபோதெல்லாம், ‘நீ நடிக்க வாயேன்’ என்பார். ‘நீ என்னைவிட அழகா இருக்கே’ என்று புகழ்வார். ‘நீ சினிமாவுக்கு வந்தா, ஒரு ரவுண்டு வருவே’ என்பார். ஆனால் மகளைத்தான் மருத்துவராக்கிப் பார்க்கும் விருப்பத்தில் பெற்றோர் இருந்தார்களே!

இந்தச் சமயத்தில், காரிகாபட்டி ராஜாரா என்பவரிடம் மகளை அழைத்துச் சென்று, தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து, ‘என்ன செய்வது?’ என்று ஆலோசனை கேட்டார்கள். காரிகாபட்டி ராஜாராவ் அடிப்படையில் மிகச்சிறந்த மருத்துவர். கூடவே தெலுங்கு சினிமாவின் ராஜா என்று போற்றிக்கொண்டாடப்படுபவர். புராணம் என்கிற சிறிய வட்டத்துக்குள்ளேயே உழன்றுகொண்டிருந்த தெலுங்கு சினிமாவுக்குப் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியவர். ‘சமூகக் கதைகளையும் திரைப்படமாக்கலாம்’ என மடைமாற்றிவிட்ட மாயாஜாலக்காரர். பார்த்தவுடனேயே ஜமுனாவின் எதிர்காலத்தை அவர் தீர்மானித்துவிட்டார்.

‘இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்காளே’ என்றார். ‘முக்கியமா அவளோட கண்ணு கொள்ளை அழகு. இவ பாதி நடிச்சாப்போதும்; மீதியை அவ கண்ணே நடிச்சிரும்’ என்று சொன்னார்.

சொன்னது மட்டுமில்லாமல், ’மா பூமி’ எனும் தன்னுடைய நாடகத்தில் நாயகியின் சகோதரி வேடத்தில் நடிக்கவைத்தார். எல்லோரயும் ஹீரோயினை மறந்தேபோனார்கள்; ஜமுனாவின் நடிப்பையும் அவரின் அழகையும் கண்களையும் கண்டு பாராட்டித் தள்ளினார்கள்.

அதேநேரத்தில், காரிகாபட்டி ராஜாராவ், ஜமுனாவை விதம்விதமாகப் புகைப்படங்களை எடுத்தார். இந்தித் திரையுலகில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளராக இருந்த தன் நண்பர் வி.என்.ரெட்டிக்கு அனுப்பிவைத்தார். புகைப்படங்களைப் பார்த்ததும் மலைத்துப் போன ஒளிப்பதிவாளர், ‘நான் எடுக்கும் படத்தில் நாயகியாக்குகிறேன்’ என்று தந்தி கொடுத்தார். ஆனால் காரிகாபட்டி ராஜாராவிடம் இருந்தும் ஜமுனாவின் பெற்றோரிடம் இருந்தும் எந்தவொரு பதிலும் வரவில்லை. பிறகு சில மாதங்கள் கழித்து, ‘இவள் சாதாரண ஆளில்லை. ஆந்திராவின் நர்கீஸாக வலம் வருவாள்’ என்று காரிகாபட்டி ராஜாராவ் தந்தி அனுப்பினார்.

1953-ம் ஆண்டு காரிகாப்பட்டி ராஜாராவ், தான் தயாரித்த ’புட்டிலு’ எனும் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார். படம் நன்றாக ஓடியது. அதேபோல் ஜமுனாவை எல்லோரும் கொண்டாடினார்கள். அடுத்தடுத்து படங்கள் வரத்தொடங்கின. தமிழில் 1954-ல் ‘பணம் படுத்தும் பாடு’ எனும் படத்தில் இரண்டாவது நாயகியாக ஜமுனா அறிமுகமானார். படம் சுமாராகத்தான் போனது. ஆனால் ஜமுனாவை தமிழ்த் திரையுலகம் கொண்டாடியது. அந்தக் காலத்திலேயே மூன்று மொழிகளில் வெளியான இந்தப் படம் நகைச்சுவைப் படம். செளகார் ஜானகி நாயகி. இரண்டாவது நாயகிதான் ஜமுனா.

நாகேஸ்வர ராவ், என்டிஆர் என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார். தமிழில் நடிக்க நேரம் ஒதுக்கவே பெரும்பாடுபட்டார்.

தெலுங்கில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜமுனா, தமிழில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் மட்டுமே நடித்தார். எல்.வி.பிரசாத் இயக்கிய மிகப்பெரிய வெற்றிப்படம் ‘மிஸ்ஸியம்மா’. ஜெமினியும் சாவித்திரியும் நடித்தார்கள். சாவித்திரி, எல்.வி.பிரசாத்திடம் பேசி, இன்னொரு நாயகியின் கதாபாத்திரத்தை ஜமுனாவுக்கு வாங்கிக் கொடுத்தார்.

சிவாஜியுடன் ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் ஜமுனா நடித்தார். அவர் நடித்தார் என்பதை விட அவரின் கண்கள் நடித்து ஜொலித்தன என்றே சொல்ல வேண்டும்.

‘அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ’ பாட்டுக்காகவே, ஜமுனாவுக்காகவே, ஜமுனாவின் கண்களுக்காகவே திரும்பத்திரும்பப் பார்த்தார்கள். எம்ஜிஆருடன் ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’யில் நடித்தார். சிவாஜியுடன் ‘நிச்சயதாம்பூலம்’ படத்தில் நடித்தார். ‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது’ என்ற பாடலைக் கொண்ட இந்தப் படமும் ரொம்பவே பேசப்பட்டது.

ஏவி.எம் தயாரிப்பில் ஜெய்சங்கருடன் அவர் நடித்த ‘குழந்தையும் தெய்வமும்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்’ என்று ஜமுனாவின் கண்களை மையப்படுத்தியே பாடலின் முதல் வரி எழுதப்பட்டது.

பிறகு ஆந்திரமே உலகம் என்றாகிப் போனார். வரிசையாகப் படங்கள். நீண்டகால இடைவெளிக்குப் பிறகு, அதே ஏவி.எம். தமிழுக்கு ஜமுனாவை மீண்டும் அழைத்துவந்தது. கமல் இருவேடங்களில் நடித்த ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமலின் அம்மாவாக நடித்தார் ஜமுனா. ‘நானாக நானில்லை தாயே’ என்ற பாடலையும் கமலையும் ஜமுனாவையும் எண்பதுகளின் சினிமா ரசிகர்கள் ரசித்துக் கொண்டாடினார்கள்.

'கண்ணியத்துடன் நடிப்பார். கிளாமராக நடிக்கமாட்டார். அவரின் கண்களில் அப்படியொரு ஜோதி ஒளிர்ந்துகொண்டே இருக்கும்' என்றெல்லாம் பத்திரிகைகள் ஜமுனாவை எழுதிப் போற்றின.

1936 ஆகஸ்ட் 30-ம் தேதி பிறந்த நடிகை ஜமுனாவின் பிறந்தநாள் இன்று. இன்னும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவோம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in