
பாலிவுட்டின் கனவுக்கன்னி ஹேமமாலினி இன்று தன்னுடைய 75வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். தனது அழகாலும், நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ஹேமமாலினி குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களைப் பார்க்கலாம்.
* நடிகை என ஒரு வட்டத்திற்குள் மட்டும் சுருங்காமல் இந்திய சினிமாவின் மாயாஜால உலகமான பாலிவுட்டில் இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக திறமையுடன் வலம் வந்த ஹேமமாலினி, அரசியலையும் விட்டு வைக்காமல், தீவிர அரசியலிலும் தடம் பதித்து வெற்றிக்கண்டார்.
* பாலிவுட்டின் கனவுக்கன்னி ஹேமமாலினி முதலில் திரைத்துறையில் அறிமுகமானது 1963ம் ஆண்டு தமிழில் வெளியான ‘இது சத்தியம்’ என்ற படத்தில் தான். அதன் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து தான் இந்தியில் ’சப்னோ கா சௌதாகர்’ என்ற படத்தில் அறிமுகமானார்.
* கடந்த 2000ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றவர் 2004ம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியலுக்குள்ளும் அடியெடுத்து வைத்தார். ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது மதுராவிலிருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
* தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியை பூர்விகமாகக் கொண்ட ஹேமமாலினி தமிழில் கமலுடன் ‘தசாவதாரம்’, ‘ஹேராம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
* நடிகை ஹேமமாலினியை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற படங்களில் முக்கியமானது ‘ஷோலே’ திரைப்படம். 1975ம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் ஹேமமாலினி, தர்மேந்திரா, சஞ்சீவ்குமார், அமிதாப் பச்சன், அம்ஜத்கான், ஜெயபாதுரி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தியளவில் ‘ஷோலே’ படம் செய்த தாக்கத்தையும், சாதனையையும் எந்த படமும் இதுவரை கடக்கவில்லை. மும்பையில் தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஒரு திரையரங்கில் ‘ஷோலே’ படம், வெளியிடப்பட்டு சாதனைப் படைத்தது.
* 1980ம் ஆண்டு நடிகர் தர்மேந்திராவை, ஹேமமாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஹேமமாலினியை தர்மேந்திரா திருமணம் செய்த போதே அவருக்கு ஏற்கனவே பர்காஷ் கவுர் என்பவருடன் திருமணம் ஆகி நான்கு குழந்தைகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களது திருமணத்தை ஹேமமாலினியின் அம்மா முதலில் மறுத்தாலும், பின்பு சம்மதித்து ஏற்றுக் கொண்டார். தர்மேந்திரா- ஹேமமாலினி ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே பின்னாட்களில் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஹேமமாலினி மீண்டும் பாலிவுட் படங்களில் நடிப்பது குறித்த தனது விருப்பத்தை சமீபத்திய பேட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.