
தனது நெருங்கிய தோழியின் கணவரை நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்ய உள்ளார் என்று அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ' குட்டி குஷ்பு' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் ஹன்சிகா மோத்வானி. இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ‘வேலாயுதம்’, ‘மாப்பிள்ளை’, ‘வாலு’, ‘ சிங்கம் 2’, ’மான் கராத்தே’, ‘அரண்மனை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் டிசம்பர் 4-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தனது வருங்கால கணவருடன் பாரிஸில் உள்ள உலக அதிசயமான ஈபிள் கோபுரத்தின் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஹன்சிகா சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகை ஹன்சிகா திருமணம் செய்ய உள்ள தொழிலதிபர் குறித்தும், அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்றும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. ஹன்சிகாவை திருமணம் செய்ய உள்ள தொழிலதிபர் சோஹேல் கதுரியாவிற்கும், ரிங்கி என்பவருக்கும் 2016-ம் ஆண்டு கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. ரிங்கியின் நெருங்கிய தோழியான நடிகை ஹன்சிகா, அந்த திருமணத்தில் பங்கேற்றதுடன், அதில் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரிங்கிக்கும், சோஹேல் கதுரியாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்த நிலையில், ஹன்சிகாவை சோஹேல் தற்போது திருமணம் செய்ய உள்ளார்.