
காயத்ரி என்பதை விட ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ தனம் என்பது காயத்ரிக்கு என்றைக்குமான அடையாள அறிமுகம். ’புரியாத புதிர்’, ‘மாமனிதன்’, ‘விக்ரம்’ என வெற்றிப் படங்களில் தன் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்தவர் தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் ‘பஹிரா’ படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தப் படம் குறித்தும் தனது சினிமா பயணம் குறித்தும் காயத்ரி நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
பிரபுதேவாவுடன் நடித்தது கனவு நிறைவேறியது போல என்று சொல்லியிருக்கிறீர்களே..?
நிச்சயமாக! 90’ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே மிகவும் பிடித்தவர் பிரபுதேவா மாஸ்டர். அவருடன் நடித்தது என் கனவு நிறைவேறிய தருணம்தான். இதுவரை நான் வழக்கமாக நடித்து வந்த படங்களின் பாணியில் இருந்து முற்றிலும் வேறான ஒரு கதைக்களத்தில் ‘பஹிரா’ படத்தில் பணிபுரிந்திருக்கிறேன். ஆதிக் இந்த கதையை சொன்னபோதே வித்தியாசமாக இருந்தது. பிரபுதேவா மாஸ்டரை இதுவரை பல படங்களில் நிறையப் பேசும் கலகலப்பான மனிதராக பார்த்திருக்கிறோம். ஆனால், நேரில் மிகவும் அமைதியானவர்; பக்குவப்பட்டவர்.
அவருடைய நிறையப் படங்களைச் சொல்லி, நான் அவரது ரசிகை என்று சொன்னபோது கூட அதிகம் எதுவும் சொல்லாமல், சிரித்துக் கொண்டே நன்றி என்று சொன்னார். இயக்குநர் ஆதிக் மேலே ஒரே ஒரு வருத்தம் உண்டு. பிரபுதேவாவுடன் அவர் என்னை நடனம் ஆடும்படியான வாய்ப்பு அமைத்துத் தரவில்லை என்பதுதான் அது. எதிர்காலத்தில் மீண்டும் மாஸ்டருடன் பணிபுரியும் போது அந்த வாய்ப்பு அமையும் என நம்புகிறேன்.
இந்தப் படத்திலும் இறப்பதுபோல காட்சி அமைத்து இருக்கிறார்கள் என்பதில் வருத்தமா?
எனக்கும் அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. எல்லா இயக்குநர்களும் படத்தில் காயத்ரி கேரக்டரை எப்படி கொல்லலாம் என்றுதான் ரூம் போட்டு யோசிப்பார்கள் போல! குறிப்பாக, ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு, சாதாரணமாக நான் சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் போட்டால் கூட, ‘அய்யோ, தலையைக் காணோமே!’ என கமென்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று கூட பல சமயங்களில் எனக்குத் தெரியாது. அதேபோல, இது தொடர்பாக வரும் பல மீம்களையும் ரசிப்பேன். சில மீம்களை எல்லாம் நானே பகிர்ந்திருக்கிறேன்.
நீங்கள் நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் குவித்துள்ளது குறித்து..?
நல்ல படங்கள் தனக்கான பார்வையாளர்களை கண்டுபிடிக்கும் எனச் சொல்வார்கள். அதுதான் ‘மாமனிதன்’ படத்திற்கும் நடந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் இதில் நடித்த அனுபவம் குறித்துக் கேட்டால், இந்தப் படத்தைப் போல வேறு எந்தப் படத்திற்கும் நான் கடின உழைப்பைக் கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படம் 20 - 40 வயது வரைக்குமான வாழ்க்கையை காண்பிக்கும். 20 - 30 வயதைக் கூட சமாளித்து விடலாம். ஆனால், 40 வயது வாழ்க்கையைக் காண்பிக்கும்போது, என்னதான் ஒப்பனை போட்டாலும் காட்டிக் கொடுத்துவிடும்.
அதனால், பத்து கிலோ வரை எடையை அதிகரியுங்கள் என்றார் இயக்குநர் சீனுராமசாமி. இரண்டு வாரங்கள்தான் இருக்கிறது என்றார். சரியான நேரத்திற்குத் தூங்குவதை மாற்றுவது, சர்க்கரை, மைதா, ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவது என அனைத்தையும் செய்து எடை கூட்டினேன். கிட்டத்தட்ட 70 கிலோ வரை வந்தேன். பிறகு முதல் லாக்டெளன் வந்தது. அந்த சமயத்தில்தான் கூட்டிய எடையைக் குறைத்தேன். மற்றபடி, நல்ல படமாக ‘மாமனிதன்’ இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும்.
இப்போதெல்லாம் அதிகமாக மலையாள சினிமாக்களில் கவனம் செலுத்துகிறீர்களே..?
நல்ல கதைகள் எங்கிருந்தாலும், எனக்கு நடிக்கும்படியான இடம் இருக்கும் படங்கள் எந்த மொழியானாலும் நடிப்பேன். நடிகர்களுக்கு மொழி என்பது தடை கிடையாது இல்லையா? அதற்காக மலையாளப் படங்களில் தான் இனி நடிப்பேன் என்றில்லை. தமிழ் சினிமா, வெப் சீரிஸ் என எதுவாக இருந்தாலும் ஓகேதான்.