மதுரப் பொண்ணுக்கு எதுக்கு மாடலிங்ன்னு கேட்டாங்க - ‘சிங்கப்பெண்ணே’ தாரணி பேட்டி!

நடிகை தாரணி
நடிகை தாரணி

இயல்பான அழகாலும் தெளிந்த தமிழாலும் சின்னத்திரை ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை தாரணி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிங்கப்பெண்ணே’ சீரியலில் ஜெயந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியல் அனுபவம் நடிப்புத் துறைக்குள் வந்தது என பல விஷயங்கள் குறித்து ‘காமதேனு’ டிஜிட்டலுக்காக அவருடன் கலந்துரையாடினோம்.

’சிங்கப்பெண்ணே’ அனுபவம் எப்படி இருக்கிறது? மீடியாவுக்குள் வந்த கதை சொல்லுங்கள்?

தாரணி
தாரணி

மதுர பொண்ணு நான்! படித்துக் கொண்டிருக்கும்போதே பாக்கெட் மணிக்காக, மாடலிங் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டேன். அம்மாவுக்கு அரசு வேலை என்பதால் அவரைப் போலவே நானும் வேலை வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால், எல்லோரையும் போல கொரோனா காலம் என் வாழ்க்கையையும் மாற்றி விட்டது. பின்பு, அம்மாவுக்கு வேலை சென்னைக்கு மாற்றலாகி இங்கு வந்தோம்.

என் மாடலிங் புகைப்படங்களைப் பார்த்து எனக்கு ‘சுந்தரி’ சீரியலில் சிறு கதாபாத்திரத்திற்கு அழைப்பு வந்தது. பின்பு அதில் இருந்து ‘சிங்கப்பெண்ணே’ சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ரொம்பவே வலுவான கதாபாத்திரம் எனக்கு. உண்மையை சொல்ல வேண்டுமானால், பிடித்ததை செய்து கொண்டிருக்கிறேன்.

மீடியா வரவேற்பு எப்படி இருந்தது?

தாரணி
தாரணி

எல்லா விஷயத்திலும் நல்லது கெட்டது இருக்கத்தானே செய்யும்? அதுபோலதான் எனக்கும்! “மதுரப்பொண்ணுக்கு எதுக்கு மாடலிங்... சீரியல் எல்லாம்?” என்று எனது முகத்திற்கு நேராகவே பலரும் கேட்டிருக்கிறார்கள். ஏனெனில், மீடியா என்றாலே இங்கு தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எல்லாத் துறைகளிலும் தவறான விஷயங்கள் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், மீடியா என்றால் மட்டுமே பெரிதாக ஊதி காட்டப் படுகிறது. அதிலிருந்து வெளியே வாங்கள் என்றுதான் சொல்வேன்.

அதிலும் உறவுக்காரர்கள் விஷம்தான். நாம் வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேறினாலும் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. எல்லோரையும் குறை சொல்லவில்லை. எனக்கு அப்படி அமைந்து விட்டது; அவ்வளவுதான்! ஆனால், ஜெயந்தியாக ரசிகர்கள் தரும் அன்பை நிச்சயம் மறக்க மாட்டேன்.

வாய்ப்புக் கிடைக்காமல் சில நடிகர்கள் தற்கொலை முடிவுக்குப் போவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தாரணி
தாரணி

இது வருத்தத்திற்குரிய விஷயம்தான்! நாம் எப்போதும் ஒரு திறமையை நம்பியே இருக்கக் கூடாது. ஏனெனில், இன்றைய காலக்கட்டத்தில் திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. அதனால், போட்டிகளும் அதிகம். நமக்கு எந்த விஷயத்தில் எல்லாம் ஆர்வம் இருக்கிறதோ அதில் போதிய அளவு திறமையை வளர்த்துக் கொண்டு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல. நம் மீது அன்பு கொண்டவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களை காலத்திற்கும் கவலைப்பட வைக்கக் கூடாது. நான் பல சமயங்களில் தனிமையை அனுபவித்திருக்கிறேன். அதுபோல, உங்களுக்குப் பிரியமானவர்களை தவிக்கவிடாதீர்கள் என்பதுதான் என் வேண்டுகோள்.

நிஜ வாழ்வில் உங்களுடைய ‘சிங்கப்பெண்ணே’ தருணம் எது?

தாரணி
தாரணி

என் கல்லூரி காலத்தை சொல்வேன். அப்போதிருந்தே என் குடும்பப் பொறுப்பு தொடங்கி விட்டது. கல்லூரியிலும் சரி, குடும்பத்திலும் சரி பல விஷயங்களில் தைரியமாக முன்னே நிற்பேன். வீட்டில் நான் தான் மூத்த பெண். என்னுடைய 17 வயதில் இருந்தே அம்மா, தங்கை என அவர்களுக்கான தேவைகளை கவனித்து வருகிறேன்.

இன்னொரு விஷயம் சொல்லவா... பெண்கள் அனைவருமே அவர்கள் வாழ்க்கையில் சிங்கப்பெண்தான்! எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. அதனால், வாழ்வை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!

தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!

கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in