
‘மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. ’கோடியில் ஒருவன்’, ‘காட்டேரி’ ஆகிய படங்களைத் தொடந்து தற்போது, உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் நடித்திருக்கிறார். மார்ச் 17-ல் வெளியாகி இருக்கும் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மற்றும் தனது சினிமா பயணம் குறித்து காமதேனுவுக்காக ஆத்மிகா பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இவை.
இதுவரை நீங்கள் நடித்த படங்களில் இருந்து ‘கண்ணை நம்பாதே’ எப்படி வேறுபடுகிறது?
ரசிகர்களிடம் போய்ச்சேர வேண்டும் என்பதற்காக சில கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்போம். அதை எல்லாம் தாண்டி, நம் நடிப்புத் திறனை நிரூபிக்க வாய்ப்புத் தரும் கதைகளிலும் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ‘கண்ணை நம்பாதே’ கதைக்களம் எனக்கு அப்படியான ஒரு திரைப்படம். என் சினிமா பயணத்தில் இந்தக் கதை எப்போதுமே முக்கியமானதொரு படமாக இருக்கும் என நம்புகிறேன்.
எனக்கு மட்டுமல்ல... இந்தப் படத்தில் நடித்த அனைவருக்குமே இந்தக் கதைக்களம் அப்படியானதொரு நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இயக்குநர் மாறன் முதன் முதலில் இந்தக் கதையைச் சொன்ன விதமே அழகாக இருந்தது. த்ரில்லர் கதையில் நான் அப்படியே ஒன்றிவிட்டேன். கதை கேட்டபோது எனக்குக் கிடைத்த அனுபவம் நிச்சயம் படம் பார்க்கும் உங்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறேன்.
உதயநிதி ஸ்டாலின் என்ன சொன்னார்?
முதலில் அவருடன் பழக எனக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால், சில நாட்களிலேயே மிக எளிமையாகவும் ஜாலியாகவும் பழகக்கூடியவர் எனத் தெரிந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள் நடந்தது. கொரோனா, நடிகர்களின் படப்பிடிப்புத் தேதிகளில் மாற்றம் என இந்தப் படத்துக்கு பல சவால்கள் இருந்தது. “காலேஜ் படிக்கும்போது இந்தப் படத்துல கமிட் ஆனீங்க. இப்போ படிச்சே முடிச்சாச்சு” என உதயநிதி சார்கூட கலாய்ப்பார். எனக்கு அவருடன் வெகு சில காம்பினேஷன் காட்சிகளே படத்தில் இருக்கிறது.
சமீபத்தில் நீங்கள் சந்தித்த மோசமான அனுபவம் என்று எதைச் சொல்வீர்கள்?
என்னுடைய காதல் தோல்வி! அது சொல்லிக் கொடுத்தது போன்ற சிறந்த அனுபவம் வேறெதுவும் கிடையாது. எங்கள் காதலில் என்னை காதலித்தவர்தான் என்னை விட்டு விலகிச் சென்றார். அது எனக்கு வருத்தம்தான். இதை நினைத்து இரவெல்லாம் கூட அழுதிருக்கிறேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் உங்களுக்கு பணமா புகழா என்று யாராவது கேட்டால், நிச்சயம் பணம்தான் முக்கியம் என்று சொல்வேன். ஏனென்றால், அதுதான் யதார்த்தம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்பாராத விதமாக என் அப்பா சமீபத்தில் இறந்து விட்டார். அதுவும்கூட மோசமான அனுபவம் தான். அப்பாவை எப்போதுமே மிஸ் செய்வேன்.
உங்கள் ரசிகர்களுக்கு நீங்க தர விரும்பும் டிப்ஸ்?
வேறு எதை விடவும் உங்கள் உடல்நலனும் மனநலனும் முக்கியம்! அதைக் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். இப்போது கோடைக்காலம் நெருங்கி விட்டது என்பதால் அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் என்பது அவசியமானது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் அது நம் உடலில் ஏராளமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். தினமும் ஒரு மணி நேர உடற்பயிற்சி, சரியான நேரத்திற்கு தூக்கம், பிடித்த வேலை என சரியான திட்டமிடலோடு முன்னோக்கிச் செல்லுங்கள்.
கைவசம் இருக்கும் படங்கள் பற்றி..?
அருள்நிதியுடன் ‘துணிவின் குரல்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். இதுதவிர, நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருக்கும் ‘நரகாசுரன்’ படமும் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.