
பிரபல நடிகை அனுஷ்கா மலையாளத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் ’சூப்பர்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுஷ்கா ஷெட்டி. இதைத்தொடர்ந்து அவர் நடித்த விக்ரமார்குடு, அருந்ததி போன்ற திரைப்படங்கள் தெலுங்கில் பெருவாரியான வெற்றியை பெற்றிருந்தது.
குறிப்பாக அருந்ததி திரைப்படம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது. தமிழில் ரெண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அனுஷ்கா, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ஆர்யா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அனுஷ்காவின் திரை வாழ்க்கையில் பாகுபலி திரைப்படங்கள் முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தன. இதனால் நாடு முழுவதும் அறிந்த நடிகையாக அவர் உருமாறினார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய திரை உலகங்களில் மற்றும் பயணித்து வந்த அனுஷ்கா தற்போது மலையாளத்திலும் களமிறங்க முடிவு செய்துள்ளார்.
’ஹோம்’ என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்த, ரோஜின் தாமஸ், புதிதாக இருக்கும் ’கத்தனார் - தி வைல்ட் சார்சரர்’ என்ற மலையாள திரைப்படத்தில் ஜெயசூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர் மலையாளத் திரை உலகிலும் அறிமுகமாக உள்ளார். பீரியட் ஃபேண்டஸி படமாக உருவாகும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகங்களில் கிடைத்த வெற்றியை மலையாளத்திலும் அனுஷ்கா தக்கவைப்பாரா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.