தனது தந்தை ஷஷிகாந்த் லோகண்டேயின் உடலை மயானத்திற்கு நடிகை அங்கிதா சுமந்து செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பாலிவுட் உலகின் பிரபல நடிகை அங்கிதா லோகண்டே. இந்தியாவின் சிறந்த குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்த அங்கிதா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார். கடந்த 2009-ம் ஆண்டு மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ஜோடியாக 'பவித்ரா ரிஷ்தா' என்ற பிரபலமான நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார்.
கங்கனா ரனாவத் நடித்த 'மணிகர்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி' தான் அங்கிதா நடித்த முதல் படம். இதன் பின் ரன்தீப் ஹூடாவுடன் சுதந்திர வீர் சாவர்க்கரில் நடிக்கிறார். வீர் சாவர்க்கரின் மனைவி யமுனாபாய் வேடத்தில் அங்கிதா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த நடிகை அங்கிதாவின் தந்தை ஷஷிகாந்த் லோகண்டே(68). வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களாக உடல்நலன் குன்றியிருந்த அவர் நேற்று முன்தினம் காலமானார். அவரது இறுதிச்சடங்கு மும்பையில் உள்ள ஒஷிவாராவில் நேற்று நடைபெற்றது. இதில் அங்கிதாவும் , அவரது தாய் வந்தனா பாண்டிஸ் லோகண்டேவும் கலந்து கொன்டனர்.
அப்போது ஆம்புலன்ஸில் இருந்து மயானத்திற்கு ஷஷிகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது தனது தந்தையின் உடலை அங்கிதா சுமந்து சென்றார். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
தனது தந்தை ஷஷிகாந்த் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர் அங்கிதா. தனது தந்தையுடன் எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் அவர் அடிக்கடி வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.