மருத்துவமனையில் ஸ்கேன் செய்த போது நடிகையை படம் பிடித்த மர்மநபர்!

மருத்துவமனையில் ஸ்கேன் செய்த போது நடிகையை படம் பிடித்த மர்மநபர்!

மருத்துவமனையில் ஸ்கேன் செய்தபோது நடிகையை புகைப்படம் எடுத்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தமிழில் விஜயகாந்தின் அரசாங்கம், கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி படங்களில் நாயகியாக நடித்தவர் நவ்நீத் கவுர். மும்பையை சேர்ந்த இவர், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர், மகாராஷ்டிராவை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. ரவி ராணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இப்போது, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பி.யாக இருக்கிறார் நவ்நீத் கவுர். இவரும் இவர் கணவர் ரவி ராணாவும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் சாலீசா பாடப்போவதாக நவ்நீத் கவுரும் அவர் கணவரும் அறிவித்ததை அடுத்து கடந்த மாதம் 23-ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார் நவ்நீத் கவுர்.

அங்குள்ள ஸ்கேன் சென்டரில் நவ்நீத்துக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்த போது மர்ம நபர் ஒருவர், அவரைப் படம் பிடித்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதுபற்றி நடிகை நவீநீதி புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் மருத்துவமனைக்குள் புகைப்படம் எடுத்ததை அனுமதிக்க முடியாது என்றும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.