காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் விசித்ராவுக்கு இல்லை! - பிக் பாஸ் வீடு குறித்து பேசும் நடிகை அம்மு ராமச்சந்திரன்!

அம்மு ராமச்சந்திரன்
அம்மு ராமச்சந்திரன்

முந்தைய சில பிக் பாஸ் சீசன்கள் விடவும் இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே மக்களிடம் பேசு பொருளாகி இருக்கிறது. அதற்குக் காரணம், பிக் பாஸ் கொடுத்த பரபர டாஸ்க்குகளும் பிக் பாஸ் வீட்டை ஸ்மால் பாஸ் வீடு என இரண்டாகப் பிரித்ததும்தான்.

ஜோவிகா, நிக்சன், ஐஷூ, மணி சந்திரா, ரவீனா, பிரதீப், விசித்திரா, மாயா, பூர்ணிமா ஆகிய போட்டியாளர்களோடு இப்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக புதிதாக ஐந்து பேர் உள்ளே நுழைந்து மேலும் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது நிகழ்ச்சி. பிக் பாஸ் குறித்து விசித்திராவின் தோழியுமாகிய நடிகை அம்மு ராமச்சந்திரனிடம் பேசினோம்.

இந்த பிக் பாஸ் சீசன் உங்களுக்கு எப்படி இருக்கிறது?

முந்தைய சீசன்களை விடவே இந்த சீசன் எனக்கு பரபரப்பாக இருக்கிறது. விளையாட்டைப் பற்றி தெளிவாகப் புரிந்து வைத்துக் கொண்டு போட்டியாளர்கள் சரியான கன்டென்ட் கொடுப்பதாகத் தோன்றுகிறது. வழக்கமாக, பெரியவர்களிடம் சிக்கிக் கொண்டுதான் குழந்தைகள் பாடுபடுவார்கள். ஆனால், இந்த சீசனில் இது தலைகீழாக நடக்கிறது. ஏனெனில், வெவ்வேறு வயதுடையவர்கள் இங்கு இருக்கும் போது ஒவ்வொருவருடைய எண்ணமும் வேறு விதமாக இருக்கிறது. நிகழ்ச்சிக்கும் சுவாரஸ்யம் கூட்டுகிறது.

இந்த சீசன் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை பேசுபொருளாகி இருக்கும் விஷயங்களில் முக்கியமானது, ஜோவிகா-விசித்திரா கல்வி குறித்து பேசியதுதான். இதில் உங்கள் கருத்து என்ன?

ஜோவிகா விசித்திரா சண்டை...
ஜோவிகா விசித்திரா சண்டை...

உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், எந்தத் தலைமுறை குழந்தைக்கும் படிப்பு விஷயத்தைப் பற்றி பேசினால் பிடிப்பதில்லை. அதேதான், இப்போது பிக் பாஸ் வீட்டிலும் நடந்திருக்கிறது. ஆனால், அதை ஜோவிகா தெளிவாகக் கையாண்ட விதம் பிடித்திருக்கிறது. யுகேந்திரனும் விசித்திராவும் எப்படியாவது படித்துவிட வேண்டும் என்று சொல்லிய கருத்து சரியானதுதான். ஆனால், எதோ ஒரு சூழல் காரணமாக இரு தரப்புக்கும் அது விவாதமாகி விட்டது.

விசித்திரா பிக் பாஸ் வீட்டிற்குள் போகிறார் என்றதும் என்ன அட்வைஸ் கொடுத்தீர்கள்?

நடிகை விசித்திரா...
நடிகை விசித்திரா...

விசித்திரா எனக்கு அக்கா போல. அவருக்கு அட்வைஸ் செய்யும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என நினைக்கிறேன். அவர் பிக் பாஸ் வீட்டிற்குப் போகப்போகிறேன் என சொன்னதும் ‘சரியான ஆளைத்தான் பிக் பாஸ் தேர்ந்தெடுத்து இருக்கிறார்’ எனத் தோன்றியது. ஏனெனில், அவர் வெளியிலும் பாசமாக, அக்கறையாகப் பார்த்துக் கொள்வார். அது பிக் பாஸ் வீட்டிற்கும் பொருந்தும் என நினைத்தேன்.

அதேபோல, அவர் வயதில் மூத்தவர் என்பதால் இந்த தலைமுறையோடு பிக் பாஸ் வீட்டில் ஒத்துப்போக மாட்டார் என வெளியில் சில கமென்ட்ஸ் பார்த்தேன். விசித்திராவுக்கும் மூன்று வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். அதனால் அவர் நிச்சயம் இந்தத் தலைமுறையைப் புரிந்து நடந்து கொள்ளக் கூடியவர்தான். உடை, நிறம் குறித்து அவர் மீது சில கமென்ட்ஸ் பார்க்க முடிகிறது. யதேச்சையாக பேசுவது அவர் இயல்பு. காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பேசியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

உள்ளே வந்திருக்கும் வைல்ட் கார்ட் போட்டியாளர்களால் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படும் என நினைக்கிறீர்கள்? யார் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர்?

ரவீனா
ரவீனா

நிச்சயம் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டும். வந்த முதல் நாளே ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். சண்டையும் பரபரப்பாக இருக்கிறது. எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இனிதான் பார்க்க வேண்டும். எனக்குப் பிடித்த போட்டியாளர் என்றால் ரவீனாதான். அவர் விளையாட்டுக்காக சொல்லவில்லை. அவருடைய தனிப்பட்ட கேரக்டரே எனக்குப் பிடித்திருக்கிறது. எளிதில் எல்லோருடனும் நட்பாகி விடுகிறார். அதேபோல, கூல் சுரேஷ் மூட் ஸ்விங் ஆகி சில சமயம் வேறு மாதிரி நடந்து கொள்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in