
பிரபல நடிகை அமலாபாலுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகவும், அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும் அவருடைய ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங் தத் என்பவர் விழுப்புரம் மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகை அமலாபால் திரைப்படத் தொழிலில் ஏற்பட்ட நட்பு காரணமாக பவ்நிந்தர் சிங் தத் (எ) பூவி என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அவருடன் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினரிடமும் அமலாபால் நெருங்கிய நட்புடன் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பவ்நிந்தர் சிங் தத் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அமலாபால் திரைப்பட நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருந்தாராம். அந்நிறுவனத்துக்காக 2018-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரியமுதலியார் சாவடியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்திருந்திருக்கிறார்கள்.
அமலாபால் மற்றும் பவ்நிந்தர் சிங் தத் ஆகிய இருவரும் ஒன்றாக அங்கு தங்கியிருந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பவ்நிந்தர் சிங் தத், அமலாபாலுடன் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில்பதிவிடுவதாக அமலாபாலுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த அமலாபால், இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரில் "பவ்நிந்தர் சிங் தத்தும், அவரது உறவினர்களும் தன்னை ஏமாற்றியதுடன், அச்சுறுத்தியும், கொலை மிரட்டல் விடுத்தும், பணம் மற்றும் சொத்துகளை மோசடி செய்து வருவதாகவும், தனக்கு மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் தொழில் ரீதியாகவும் துன்புறுத்தல்கள் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அதனால் மேற்படி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது புகாரில் கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 16 பிரிவுகளின் கீழ் நேற்றையதினம் வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் பவ்நிந்தர் சிங் தத் (எ) பூவி இன்று கைது செய்யப் பட்டுள்ளார். நடிகை அமலாபாலின் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.