உலக அழகிப் போட்டியில் ஆயிரம் பேர் பட்டம் வெல்லலாம். ஆனால், இந்திய சினிமா ரசிகர்களுக்கு உலக அழகி என்றால் அது இப்போது வரை ஐஸ்வர்யா ராய் மட்டும்தான்.
’பொன்னியின் செல்வன்’ நாவலில் நந்தினியின் அழகை ‘பூரண சந்திரனைப் போல அவள் முகம் வட்ட வடிவமாயிருந்தது’ என அந்த நிலவின் குளிர்மையோடு ஒப்பிட்டிருப்பார் கல்கி.
அந்த கதாபாத்திரம் ஏற்ற ஐஸ்வர்யாராய்க்கும் அந்த வார்த்தை மாறாது பொருந்தும். 50 கேஜி தாஹ்மஹாலுக்கு இன்று ஐம்பதாவது பிறந்தநாள். அவர் குறித்தான சில சுவாரஸ்ய தகவல்களை இங்குப் பார்க்கலாம்.
* கர்நாடகாவில் பிறந்த ஐஸ்வர்யாவுக்கு ‘துளு’ தான் தாய்மொழி. குடும்ப சூழல் காரணமாக சிறுவயதிலேயே மும்பைக்குக் குடிபெயர்ந்தார். படித்து மருத்துவர் ஆக வேண்டும் என விருப்பப்பட்டவருக்கு காலம் வேறு திட்டங்கள் வைத்திருந்தது. 1991ஆம் ஆண்டு மாடலிங் துறைக்குள் நுழைந்தவருக்குக் காத்திருந்தது அதிர்ஷ்டம். அப்படியே விளம்பர வாய்ப்புகள் வர அமீர்கானுடன் இவர் இணைந்து நடித்த பெப்ஸி விளம்பரம் பெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
* 1994ஆம் ஆண்டு உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை ரசிகர்களின் மனதில் அந்த சிம்மாசனத்தில் என்றும் நிலைத்து விட்டார் ஐஸ்வர்யா.
* ஐஸ்வர்யா ராயின் நடிப்பைப் போலவே அவரது நடனத்திலும் அவ்வளவு அழகும் நளினமும் இருக்கும். சிறுவயதில் அவர் நடனத்திற்கு தகுதியானவர் இல்லை என தனது ஆசிரியர் ஒருவரால் அவமானப்படுத்தப்பட, அதன் பிறகே தன்னம்பிக்கையோடு நடனம் கற்றுக் கொண்டிருக்கிறார்.
* தமிழில் அவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மணி ரத்னம். ‘இருவர்’, ‘ஜீன்ஸ்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘எந்திரன்’, ‘ராவணன்’, ‘பொன்னியின் செல்வன்’ என மொத்தம் ஆறு படங்களில் மட்டும்தான் தமிழில் நடித்திருக்கிறார்.
* திரைத்துறையில் பல நடிகைகளைப் போலவே காதல் சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா. ஆரம்ப காலத்தில் நடிகர் சல்மான்கானுடன் காதல் வயப்பட்டு பின்பு பிரிந்தார். இதனால் எழுந்த சர்ச்சைகள், மன உளைச்சல்கள் இவற்றை எல்லாம் கடந்து வந்து, கடந்த 2007 ம் ஆண்டு நடிகர் அமிதாப்பின் மகன் நடிகர் அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்து கொண்டார்.
* நடிகை என்பதையும் தாண்டி விதவிதமான உடைகள் அணிவதில் ஐஸ்வர்யாவுக்கு அலாதி பிரியம். கேன்ஸ் திரைப்பட விழாவில் இவரது உடைகள் தனி கவனம் பெறும். தற்போது சினிமா மட்டுமல்லாது ’அம்பீ’ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து பிசினஸிலும் கொடிக்கட்டி பறக்கிறார் ஐஸ்வர்யா ராய்.