
’இறுகப்பற்று’ படத்தின் வெற்றி விழாவில் நடிகை அபர்ணதி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள 'இறுகப்பற்று’ படம் கடந்த அக்டோபர் 6ம் தேதி வெளியானது. இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படக்குழுவினர் இதன் வெற்றி விழாவில் கலந்து கொண்டனர்.
இதில் நடிகை அபர்ணதி பேசும்போது, “இந்த படத்தில் நடித்ததற்காக முதலில் நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் பார்த்த பார்வையாளர்கள் எந்த ஒரு குறையும் சொல்லவில்லை. படம் பார்த்துவிட்டு நிறைய பேர் என்னுடன் கனெக்ட் ஆகி தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இந்தப் படத்தின் மூலம், ‘அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்’ என வடிவேலு சொன்னது போல என் வாழ்க்கையிலும் நடந்தது. நான் சினிமாவிற்காக முயற்சி செய்தபோது என்னுடைய தந்தையின் நண்பரின் மகன், ’சினிமாவிற்கு போய் நீ என்ன கிழிக்கப் போற’ என்று கேட்டான். ஆனால் இன்றைக்கு துபாயில் இந்த படம் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கி கிழித்துப் போட்டு தான் உள்ளே போய் படம் பார்த்தான்.
இப்போதுதான் சினிமாவில் வெற்றியை பார்க்கிறேன். இந்தப் படத்தில் கிளைமாக்ஸில் நான் அழுதது நிஜமான அழுகைதான். என்னடா டைரக்டர் இப்படி போட்டு வேலை வாங்குகிறாரே என்று நினைத்ததால் வந்தது அழுகை. இப்படத்தில் நடித்தது ஒரு சவாலாகவே இருந்தது. விதார்த்தை பார்க்கும்போது மைனாவில் இருந்த அதே பவர் இதிலும் இருந்தது. விக்ரம் பிரபு இப்படத்தில் உணர்வுகளை சரியாக பேலன்ஸ் செய்திருக்கிறார். இயக்குநர் யுவராஜ், ஸ்ரீயை நன்றாக வேலை வாங்கி இருந்தார்” என்று கூறினார்.